மத்திய அரசுப் பணிகளில் நியமனம் தொடர்பாக அண்மையில் யுபிஎஸ்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.
எதிர்ப்பு குரல்:
அதில் லேட்டர் என்ட்ரி முறை மூலம் பணி நியமனம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்தது.
அரசின் முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
லேட்ரல் என்ட்ரி முறை ரத்து:
மத்திய அரசின் உயர் பதவிகளானது , யுபிஎஸ்சி தேர்வில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பல வருடங்கள் அதிகாரிகளாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது, துறை ரீதியான திறன் படைத்தவர்கள் இடம்பெற வேண்டும் என கூறி, தனியார் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என லேட்ரல் என்ட்ரி முறையை பாஜக அரசு கொண்டுவந்ததது.
இதற்கு, பாஜகவின் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, லேட்ரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்யும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
”அரசியல் சாசனம் வென்றது”
இந்த ரத்து அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவிக்கையில், அரசியல் சாசனம் வென்றது; சமூக நீதிக்கான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், என்ன விலை கொடுத்தேனும் இட ஒதுக்கீட்டையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்போம். மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன், 50 சதவிகித இட ஒதுக்கீட்டு வரம்பை ரத்து செய்து , சாதிவாரி கணக்கெடுப்பின்படி சமுக நீதியை நிலைநாட்டுவோம். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.