மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி மர்லினா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி?


கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கு அடுத்த நாளே அமலாக்கத்துறையால் காவலில் எடுக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி மறுக்கப்படுவதாக அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார். வீடியோ காலில் தனது மருத்துவரிடம் ஆலோசனைகளை பெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது என அமலாக்கதுறை தரப்பில் வாதிடப்பட்டது.


இப்படிப்பட்ட சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக அதிஷி மர்லினா கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அதிஷி, "மூன்று தேர்தல்களில் (டெல்லி சட்டசபை தேர்தல்) அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவால் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, அவரை சிறையில் அடைத்து கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது.


பரபரப்பை கிளப்பிய டெல்லி அமைச்சர்:


அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 30 ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வருகிறார். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்கிறார்.


எந்த டாக்டரிடம் கேட்டாலும், இவ்வளவு தீவிரமான சர்க்கரை நோய் உள்ளவர்தான் இவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொள்வார் என சொல்வார்கள். அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப உணவை சாப்பிடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.


ஆனால், இன்று பாஜக, அதன் துணை அமைப்பு (ED) மூலம் கெஜ்ரிவால்ஜியின் உடல்நிலையை கெடுக்க முயல்கிறது. ED மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறது" என்றார்.


 






இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "சர்வாதிகாரத்துக்கும் எல்லை உண்டு. சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. 30 வருட சர்க்கரை நோயாளி அரவிந்த் கெஜ்ரிவால். தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300ஐ எட்டியது. இது கவலைக்குரிய விஷயம்" என குறிப்பிட்டுள்ளார்.