நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்வேறு விவகாரங்களை வைத்து,  முதல் நாளிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். இச்சூழலில், இன்று பீகார் மாநில வக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்தார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement


“நாடாளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா.?“ - கார்கே கேள்வி


நாடாளுமன்றத்தில், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இன்றும் அது குறித்து வலியுத்தப்பட்டது. ஆனால், விவாதம் நட்தத அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.


இந்நிலையில், இன்று மாநிலங்களவையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவரான ஜே.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


அப்போது பேசிய கார்கே, நாடாளுமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்(CISF) குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஜனநாயக உரிமையை(போராட்டம்) செயல்படுத்தும்போது, இவ்வாறு சிஐஎஸ்எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், நாடாளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா.?  அதாவது அவையின் நடவடிக்கைகள் கீழிறங்கி விட்டனவா என்று கேட்ட அவர், இது ஆட்சேபனைக்கு உரியது என்றும் தெரிவித்தார்.


“அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள்(காங்கிரஸ்) எதிர்க்கட்சி தான்“


கார்கேவின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பாஜக தேசியத் தலைவரும், அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா, அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல என்பதை நீங்களே தெளிவுபடுத்தி விட்டீர்கள் என கார்கேவை பார்த்து கூறினார்.


மேலும், நான் பேசிக் கொண்டிருக்கம்போது சிலர் எனதருகே வந்து கோஷம் எழுப்புவது என்பதும் ஜனநாயகம் அல்ல, பேச உரிமையுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது இடையூறு ஏற்படுத்துவதற்காக இருக்கையில் இருந்து எப்போது அவர்கள் எழுகிறார்களோ, அந்த கணமே அவர்களுடைய ஜனநாயக சிந்தனை முடிவுக்கு வந்து விடுகிறது என பதிலளித்தார்.


அவை முறையாக நடப்பதற்கான வழி இது அல்ல எனக் கூறிய அவர், தான் அங்கே எதிர்க்கட்சியாக பல வருடங்கள் இருந்துள்ளதாகவும், அதனால், எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு தான் கூறுவேன் என்றும்  கார்கேவை பார்த்து கூறினார்.


அதோடு, அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாகத் தான் இருக்கப் போகிறீர்கள், அதனால் தான் அப்படி கூறினேன் எனவும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.


“கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி“


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்தே எதிர்க்கட்சிகள், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதிக்குமாறு கூறி அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.