Manipur Issue: பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது தொடர்பான காங்கிரஸின் கேள்விக்கு, அம்மாநில முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதலமைச்சர்:
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் பிரைன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறதோ அதற்காக மாநில மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அதற்காக நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு, 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்” என பிரைன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கோரிக்கை
தொடர்ந்து பேசுகையில், “மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். என்ன நடந்ததோ அது நடந்து விட்டது. நீங்கள் கடந்த கால தவறுகளை மன்னித்து மறந்துவிட வேண்டும், மேலும் அமைதியான மற்றும் வளமான மணிப்பூரை நோக்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்" என்று முதலமைச்சர் பிரைன் சிங் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்?
மணிப்பூர் முதலமைச்சரின் பேட்டியை குறிப்பிட்டு, பிரதமர் மோடி இதுநாள் வரை அங்கு செல்லாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான பதிவில், “பிரதமர் மோடியால் ஏன் மணிப்பூருக்குச் சென்று, முதலமைச்சர் சொன்னதை பொதுமக்களிடம் சொல்ல முடியவில்லை? 2023 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் அவர் நாடு மற்றும் உலகத்தை சுற்றி வந்தாலும், மணிப்பூர் மாநிலத்திற்கு வருவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார். மணிப்பூர் மக்களால் இந்த புறக்கணிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை” என பதிவிட்டு இருந்தார்.
”காங்கிரஸ் தான் காரணம்” - பிரைன் சிங்
காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு டிவிட்டரில் பதிலளித்த பிரைன் சிங், “மணிப்பூரில் பர்மிய அகதிகளை மீண்டும் மீண்டும் குடியமர்த்தியது மற்றும் மாநிலத்தில் மியான்மரை தளமாகக் கொண்ட போராளிகளுடன் SoO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது போன்ற காங்கிரஸ் செய்த கடந்தகால பாவங்களால் இன்று மணிப்பூர் கொந்தளிப்பில் உள்ளது என்பதை நீங்கள் உட்பட அனைவரும் அறிவீர்கள். ப. சிதம்பரம் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1992-97 காலகட்டத்தில் மணிப்பூரில் நாகா-குகி மோதலால் சுமார் 1,300 பேர் இறந்தனர். அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ஹா ராவ் மணிப்பூர் வந்தாரா? 1997-98களில் குகி மற்றும் பைட் மோதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மணிப்பூர் வந்து மன்னிப்பு கேட்டாரா?” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் நிகழும் பல மோசமான சம்பவங்களுக்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எடுத்த முடிவே காரணம் என பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதேபாணியில், மணிப்பூர் பிரச்னைக்க்கும் காங்கிரஸ் தான் காரணம் என முதலமைச்சர் பிரைன் சிங் கூறியுள்ளார். அதேநேரம், மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாகவும், மணிப்பூரில் கடந்த 2017ம் ஆண்டு முதலும் பாஜக ஆட்சி தான் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.