Bihar Stampede: நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் நடந்த மதக்கூட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் பலி

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் மதவழிபாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் பக்தர்கள் கூடியதால், வழிபாட்டின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழப்பமான சூழல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் அரசும் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாலந்தா கோயிலில் நடந்தது என்ன?

செவ்வாய்கிழமை நாட்களில் வழக்கமாகவே இந்த கோயிலில் அதிகப்படியான கூட்டம் குவியுமாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பாட்னாவில் இருந்து கூட பலரும் வந்து இந்த ஆலயத்தில் வழிபட்டு செல்வார்களாம். அந்த வகையில் இன்று காலையில் கூடிய கூட்டத்தை நிர்வகிக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததே இன்றைய விபத்திற்கு காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், கூடியிருந்தவர்கள் யாரும் வரிசையில் செல்லவில்லை எனவும், விரைந்து சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என முண்டியடித்ததே காரணம் என்றும் விபத்தின் போது அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சைத்ர நவரத்திரியின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகளவில் பக்தர்கள் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த அரசு

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் முதலமைச்சர் நிவாரண பிரிவில் இருந்து 2 லட்சம் ரூபாய் என, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதுபோக, பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.