பீகாரில் மனநல பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, சாலையில் போட்டு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், மனநல பாதிக்கப்பட்டவரை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, மக்களை காக்க வேண்டிய இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களை அச்சத்தில் ஆழத்தி வருகிறது.
இந்த நிலையில், பீகாரில் நடந்த சம்பவம் ஒன்று நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. கதிஹார் நகரில் மனநல பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, சாலையில் போட்டு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
ஊர்க்காவல்படையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் சேர்ந்து, சாலையில் அமர்ந்துள்ள மனநல பாதிக்கப்பட்டவரை தங்களின் தடியை கொண்டு தாக்குகின்றனர். இதனை அருகில் இருக்கும் ஒருவர் வீடியோவாக எடுக்கிறார்.
போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் பின்னர் இறங்கி, அதிகாரிகளில் ஒருவரிடமிருந்து தடியை வாங்கி, மனநல பாதிக்கப்பட்டவரின் கால்களில் மீண்டும் அடிக்கத் தொடங்குகிறார். தன்னை விட்டுவிடும்படி மனநல பாதிக்கப்பட்டவர் கெஞ்சுகிறார்.
ஆனால், போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் அதை கேட்காமல், அவரை மீண்டும் தாக்குகிறார். மற்ற அதிகாரியின் உதவியுடன் அவரை வாகனத்தின் பின்புறத்திற்கு இழுத்துச் செல்கிறார். இந்த சம்பவம் கதிஹாரின் சமேலியின் சோஹர் கிராம பஞ்சாயத்து பகுதியில் நடந்தது.
பாதிக்கப்பட்டவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எந்த காரணமும் இல்லாமல் அதிகாரிகள் தாக்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். போதியா காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் கேதார் பிரசாத் யாதவ் மற்றும் கான்ஸ்டபிள் பிரீத்தி குமாரி, ஊர்க்காவல் படையினர் சிக்கந்தர் ராய் மற்றும் கிஷோர் மஹதோ, ஓட்டுநர் பம்பம் குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கதிஹார் காவல் கண்காணிப்பாளர் (SP) வைபவ் சர்மா தெரிவித்துள்ளார்.
பிரசாத் யாதவ் மற்றும் பிரீத்தி குமாரி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ராய் மற்றும் மஹதோவை ஒரு வருடம் பணியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஊர்க்காவல் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் பம்பம் குமார் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.