பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நீதிபதி அவினாஷ் குமார். இவர் வழங்கும் நிபந்தனை ஜாமின்கள் பீகார் மாநிலம் முழுவதும் பிரபலம். பீகாரில் உள்ள மதுபானி மாவட்டம் ஜன்சார்பூரில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக இருக்கும் அவினாஷ் குமார். வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்துகொண்டு, ஜாமின் கோரியவர்களுக்கு நூதனமான நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்குவதில் இவர் கை தேர்ந்தவராக திகழ்ந்து வருகிறார்.


அண்மையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்று வழக்கில் கைதான லல்லன் குமார் ஜன்சார்பூரில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் வல்லவரான அவினாஷ் குமாரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் லல்லன் குமாருக்கு ஜாமின் வழங்க நீதிபதி அவினாஷ் குமார் விதித்த நிபந்தனை தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.


குற்றம்சாட்டப்பட்ட லல்லன் குமார் நீதிமன்றத்தில் ரூ.10,000 உத்தரவாதத் தொகை செலுத்த வேண்டும் எனவும், கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் ஆடைகளையும் இலவசமாக துவைத்து, சலவை செய்து தர வேண்டும் என்பது நீதிபதி அவினாஷ் குமார் பிறப்பித்த உத்தரவு. 6 மாத காலம் இதை லல்லன் குமார் தவறாமல் செய்த பிறகு கிராம தலைவர் அல்லது அரசு அதிகாரியிடம் முறையாக 6 மாதம் நீதிமன்ற உத்தரவுபடி கிராமத்தில் உள்ள பெண்களின் ஆடைகளை துவைத்து சலவை செய்தேன் என்ற சான்றிதழ் பெற வேண்டும் எனவும் ஆணையிட்டு உள்ளார் நீதிபதி அவினாஷ் குமார்.



கடந்த ஜூலை மாதம் கொலை முயற்சி வழக்கில் கைதான சந்தோஷ் என்பவருக்கு, காய்க்கும் வகையில் உள்ள 5 மரங்களை நட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி இருக்கிறார் அவினாஷ் குமார். திருட்டு வழக்கில் கைதான நபரிடம் இதே 10 மரங்களை நடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளார்.


சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய வழக்கில் கைதான குமார் என்பவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஜாமின் வழங்கிய நீதிபதி அவினாஷ், 5 ஏழை குழந்தைகள் இலவச கல்வி கற்க 3 மாதங்கள் உதவ வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.


கொரோனா விதிகளை மீறிய வழக்கில் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி அவினாஷ், 5 ஆம் வகுப்புக்கு கீழ் உள்ள 5 குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்து இருக்கிறார். நீதிபதி அவினாஷின் நிபந்தனைகள், சமூகத்தில் ஒரு சிலருக்கு பயனளித்தாலும், இது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியும் எழுத்தொடங்கி இருக்கிறது.