பெற்ற குழந்தைகளுக்காக பெற்றோர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. குறிப்பாக, குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் சொல்லவே வேண்டாம். இம்மாதிரியான ஒரு சம்பவம்தான் பிகாரில் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் உள்ள மகனின் உடலை பெறுவதற்காக பெற்றோர் பிச்சை எடுத்த சம்பவம் மனதையே பதற வைத்துள்ளது.
பிகார் சமஸ்திபூரில் வயதான பெற்றோர் அரசு மருத்துவமனையில் இறந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக தெருவில் இறங்கி பிச்சை எடுத்துள்ளனர். மகனின் உடலை கொடுக்க வேண்டும் எனில், 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தங்களிடம் பணம் இல்லாததால், அவர்கள் தெருவில் இறங்கி பிச்சை எடுத்துள்ளனர். இதுபற்றிய விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மனதை பதற வைத்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு, தனது மகன் காணாமல் போனதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "சில நாள்களுக்கு முன்பு, எனது மகன் காணாமல் போனார். தற்போது, எனது மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சாதார் மருத்துவமனையில் இருப்பதாக எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஆனால், மகனின் உடலை தர வேண்டும் என்றால் 50,000 ரூபாய் தர வேண்டும் என மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் ஒரு தெரிவித்தார். நாங்கள் ஏழைகள், எங்களால் எப்படி இந்த பணத்தை தர முடியும்" என்றார்.
மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்கள் ஒப்பந்தத்தில் வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு, சரியான நேரத்தில் ஊதியம் கிடைக்காது. இச்சூழலில், பலமுறை அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் கேட்பது தொடர்கதையான சம்பவம். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் செளத்ரி கூறுகையில், "இதற்கு காரணமானவர்களை விட மாட்டோம். மனித நேயத்தின் வெட்கக்கேடான சம்பவம் இது" என்றார்.
ஊழல் என்பது இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், ஒப்பந்த பணியாளர்களின் சூழலை புரிந்து இதற்கு சரியான தீர்வு எடுப்பதே நீதியை நிலைநாட்டும் செயலாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்