Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்:
பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது தேசிய அரசியலில் பெடும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார்.
செயல்திறன் அதிகரிக்கும் - நிதிஷ் குமார்:
இதுதொடர்பாக பேசிய நிதிஷ் குமார், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நேர்மறையானது மற்றும் வரவேற்பதற்கு தகுதியானது. மூன்று புதிய பொருளாதார வழித்தடங்கள் அமைக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது. இவை தளவாட செயல்திறனை கொண்டு வருவதோஉட், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.
நடுத்தர வகுப்பினருக்காக சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் அரசின் முடிவு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதன் மூலம், வாடகை வீடுகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வரிப் பிரிவில் ஓராண்டு விலக்கு அளிக்கப்படுவது தொழில் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். MNREGA பட்ஜெட் அதிகரிப்பு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பட்ஜெட்டில் உயர்கல்விக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டு, இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்” என நிதிஷ் குமார் பாராட்டியுள்ளார். இதனிடையே, பீகார் மாநிலத்தின் பட்ஜெட் கூடத்தொடர், பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இதேபோன்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டில் விரிவான அறிவிப்புகள் எதுவுமில்லை என சாடி வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த வாரம் வரை பாஜகவை வீழ்த்துவோம் என பேசி வந்த நிதிஷ்குமார், தற்போது பட்ஜெட்டை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.