பிகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசால் தொடங்கப்பட்ட கணக்கெடுப்பு ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
நிதிஷ் குமார் எடுத்த ஆயுதம்:
முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி, மே 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இச்சூழலில், சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில சமூக அமைப்புகள் சார்பாகவும் தனிநபர்கள் சார்பாகவும் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டு கொண்டது. அதேபோல, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
"மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை"
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பாக இருப்பதையும், இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யாரிடனும் அந்த தரவு பகிரப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"பிகார் அரசின் திட்டத்தின்படி, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிக்கு எதிராக மனுதாரர்கள் வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். தரவின் உண்மைத்தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய கேள்வியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு மாநில அரசு விரிவான தீர்வை வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை பாதிக்கும் வகையில், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்" என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்தாண்டு, ஜூன் 2ஆம் தேதி, குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை பற்றிய தகவல்களைச் சேகரிப்பது உள்பட, மாநிலத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கான அனைத்துக் கட்சி கோரிக்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிகார் சட்டப்பேரவையிலும் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு ஆதரவாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
பிகாரை பொறுத்தவரை அங்கு சாதி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. மற்ற மாநில அரசியலில் சாதி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை காட்டிலும் பிகாரில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
ஒவ்வொரு நகர்வும் சாதியை சார்ந்தே இருக்கும். அங்கு, சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிய குழுக்கள், ஆளும் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே ஆதரித்து வருகின்றன.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிய குழுக்களுக்காக கொண்டு வரப்படும் சமூக நல திட்டங்களை அமல்படுத்த இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும்.