ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையைத் தொடர்ந்து பெங்களூரு முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. 

வெளுத்து வாங்கிய மழை:

தென் மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நேற்று மாலைக்கு பெரும்பாலான இடங்களில் மழையானது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வெள்ள நீரானது பெருக்கெடுத்து ஓடியது. 

மஞ்சள் எச்சரிக்கை:

கர்நாடக மாநில பேரிடர் கண்காணிப்பு பிரிவின்படி திங்கட்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கெங்கேரியில் அதிகபட்சமாக 132 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து வடக்கு பெங்களூருவில் உள்ள வடேரஹள்ளியில் 131.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. நகரம் முழுவதும் பல பகுதிகளில் 100 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நகரத்தின் சராசரி மழை 105.5 மிமீ ஆகும்.  இந்திய வானிலை ஆய்வு மையம்  பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை வரை 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது.

வெள்ளக்காடான சாலைகள்:

பெங்களூருவில் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்தன. ஹெப்பலில் உள்ள மான்யதா டெக் பார்க்கிற்கு அருகிலுள்ள பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு, பொம்மனஹள்ளி மற்றும் HRBR லேஅவுட் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

நகரின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) மற்றும் கர்நாடக அரசின் அலட்சியப் போக்கை விமர்சித்து பல பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வந்தனர். மழையின் போது நகரம் முழுவதும் 19க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளாகினர்.