Bengaluru Cab: பெங்களூருவில் வாடகை வாகனங்களுக்கான கட்டணமும் கிலோ மீட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பெங்களூரு - டாக்ஸி கட்டணம் உயர்வு:
எஃகு மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகன மாடல்களின் விலைகளை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மத்திய அரசும் சுங்கக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. கூடுதலாக, கர்நாடக மாநில அரசு டீசல் மீதான விற்பனை வரியை அண்மையில் உணர்த்தியது. இதன் விளைவாக, சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை மீது கடும் சுமை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் டாக்ஸி கட்டணங்கள் ஒரு கிலோமீட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
மக்களை வாட்டி வதைக்கும் ஏப்ரல்:
2025 ஆம் ஆண்டு தொடர்ச்சியான விலை உயர்வுகளால் பொதுமக்களை தொடர்ந்து வதைத்து வருகிறது. குறிப்பாக போக்குவரத்துத் துறையில், ஏப்ரல் மாதத்தில் பல செலவுகள் அதிகரித்துள்ளது. இதில் உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடிகள், உற்பத்தியாளர்களால் வாகன விலை உயர்வு மற்றும் டீசல் வரிகளில் உயர்வு ஆகியவை அடங்கும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சுற்றுலா மற்றும் பயண சங்கம் மற்றும் வாடகை வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனை மேற்கொள்ளாவிட்டால், தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என வாடகை வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
டாக்ஸி வாடகைக் கட்டணம் உயர்வது ஏன்?
- மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை 5% அதிகரித்துள்ளது.
- ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வாகனங்களுக்கு 3% முதல் 4% வரை விலைகளை உயர்த்தியுள்ளனர்.
- ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட மஞ்சள் பலகை வாகனங்களுக்கு மாநில அரசு 5% வாழ்நாள் வரி மற்றும் கூடுதலாக 1% செஸ் வரி விதித்துள்ளது.
- இந்த மாற்றங்களால், வாகனங்கள் வாங்குவதற்கான செலவு கணிசமாக உயர்ந்துள்ளது
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு காருக்கு இப்போது ரூ.30,000 முதல்ரூ.40,000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.
- ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு காரின் விலைரூ.60,000 முதல் ரூ.80,000 வரை அதிகரித்துள்ளது.
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பலகை வாகனத்திற்கு இப்போது கூடுதலாகரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வாழ்நாள் வரி செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் அவதி:
டாக்ஸி கட்டணங்கள் அதிகரித்து வருவதால், தினசரி பயணிகள் நிதி நெருக்கடியை அனுபவிக்கின்றனர். எல்லா துறைகளிலும் விலைகள் உயர்த்தப்படுவது சாமானிய மக்களின் சுமையை அதிகரிக்கிறது. டீசல் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எரிபொருள் விலைகள் பல்வேறு துறைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், விலை உயர்வு அலையில் அடுத்தது என்ன என்ற கேள்வி எஞ்சியுள்ளது. அதன்படி, பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்களிளின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், பெங்களூருவில் டீசல் விலை ரூ.2, பால் விலை ரூ.4, வீடுகளுக்கான வாடகை 10 சதவிகிதம் என அடுத்தடுத்து உயர்ந்துள்ளன. அதற்கு முன்பு, மின்சார கட்டணம், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்து வெளியூர் மக்கள் அதிகமுள்ள இந்த நகரில் தற்போது டாக்சி கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் பெங்களூரு, வருவாயை காட்டிலும் செலவை அதிகரிக்கும் ஒரு நகரமாக உருவெடுத்து வருகிறது. அதனால், பெங்களூருவே வேண்டாம் என பலர் அங்கிருந்து வெளியேறவும் முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.