கடும் வன்முறைக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்புடன் தேர்தல்:
பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அங்கு பல்வேறு வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 65,000 துணை ராணுவப் படையினரும், மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குவிந்த மக்கள்:
வன்முறை அச்சத்திற்கு மத்தியிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்குச்சாவடிகளில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். பல இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குச்சாவடியில் வன்முறை:
இந்நிலையில் தான், கூச்பெஹார் அடுத்த சீதாயில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடி அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வாக்குச் சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன. வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தொடரும் மோதல்:
தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடிபிடித்து இருக்கிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுவரை அங்கு நடைபெற்ற மோதல்களில் 12 வயது சிறுவன் உட்ப்ட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்:
நேற்று நள்ளிரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே முர்ஷிதாபாத்தில் வன்முறை ஏற்பட்டது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் கொல்லப்பட்டார். அவரது வீடும் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது. இதனால், இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் வலுவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். அதே நேரம் அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது.