உடல்நல ஆரோக்கியத்திற்கு முக்கியமாக சொல்லப்படுவது உடற்பயிற்சி. உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்த ஆரோக்கியத்துக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம். ஆனால் முறையில்லாத அதீத உடற்பயிற்சி சிலரை பாதிப்புக்கும் உள்ளாக்கும். பெங்களூருவில் ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழும் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது. 33 வயதான நபர் பெங்களூருவில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். உடற்பயிற்சிக்கு பின்னர் மிகவும் சோர்வாகவும், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தத்தையும் அவர் உணர்ந்துள்ளார்.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மிகவும் சோர்வாக படிக்கட்டில் அமர்ந்துள்ள அந்த இளைஞர் நெஞ்சுப்பகுதியை அடிக்கடி அழுத்திக்கொள்கிறார். தண்ணீரைக் குடிப்பதும் இதயப்பகுதியை அழுத்திக்கொடுப்பதுமாகவே அவர் அமர்ந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து செல்லும் அவர் மீண்டும் படிக்கட்டில் வந்து அமர்கிறார்.
திடீரென படிக்கட்டில் இருந்து சரிந்து விழுகிறார். அதிகப்படியான உடற்பயிற்சியே அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சிலர் இளைஞர் அதீத உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். புதியதாக ஜிம்மில் சேர்பவர்கள் மருத்துவர்களை அணுகி இதய பரிசோதனை செய்த பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இளைஞர் சுருண்ட விழுந்த பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன கவனிக்க வேண்டும்?
உடற்பயிற்சி மிக முக்கியமானது. அதேவேளையில் படிப்படியாகவே உடற்பயிற்சியை செய்ய வேண்டும். ஆர்வத்தில் முதல் நாளே அதீத உடற்பயிற்சியை செய்யக் கூடாது. ஒரே நாள் உடற்பயிற்சி உடலை மாற்றாது என புரிந்துகொள்ள வேண்டும்
வீட்டில் இருந்து செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சி என்றாலும் அதனை முறைப்படி தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். ஜிம் என்றால் நிச்சயம் பயிற்சியாளர்கள் உதவியுடன் மட்டுமே உடற்பயிற்சியை செய்ய வேண்டும்
ஜிம்மில் சேருவதற்கு முன்னதாக மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்துகொள்வது மிக முக்கியம். நம் உடல்நிலையை தெரிந்துகொண்டு உடற்பயிற்சியை தொடங்குவது மிக நல்லது
உடற்பயிற்சியின் போது சிலர் சத்து பவுடர்களை எடுத்துக்கொள்வார்கள். சத்து பவுடர்களின் தேவை, அதன் சத்துவிவரங்களில் அடிப்படையிலும் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரிலுமே அதனை பயன்படுத்த வேண்டும்
மாரடைப்பு குறித்து குறிப்பிட்டுள்ள சிலர், மாரடைப்பு திடீர் என ஏற்பட்டாலும் முன்னதாகவே சிறு சிறு அறிகுறிகளை கொடுக்கும். நெஞ்சுப்பகுதியில் அழுத்தம், சிறு வலி போன்ற அறிகுறிகளை கவனக்குறைவாக கடந்துபோகக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ள வேண்டும்