பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மதிப்புமிக்க நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. அங்கு ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதற்காக நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் முளைத்து வருகிறது. பொதுவாக பெங்களூருவில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் 2024 ஆம் ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னரே அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அங்கு சுமார் 30 சதவிகித ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நகரை சுற்றியுள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்கிறது. ஆனால் காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் தேவைக்கு போதுமான தண்ணீர் உள்ளதாக பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15 ஆம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை 2,100 மில்லியன் லிட்டர் ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூருக்கு மாதம் 1.54 டிஎம்சி அடி தண்ணீர் தேவை என்ற நிலையில், நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஜூலை வரை 17 டிஎம்சி தண்ணீர் தேவை. அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது எனவும் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.