பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பெண்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் செயல்படும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை விடுதி வார்டன் மற்றும் அதிகாரிகள் தங்களை தனிப்பட்ட சேவைகளுக்கு பயன்படுத்தி வேலை வாங்குகின்றனர். அதிலும் குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி, தங்களை தவறாக நடத்தி, எங்களது உழைப்பை சுரண்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, கடந்த வாரம் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் காங்கிரஸ் மாணவர் பிரிவுக்கு எழுதிய கடிதத்தில், மாணவர்கள் கடந்த சில வருடங்களாக தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களுடன் விவரித்துள்ளனர். அதில், கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டாலோ, உத்தரவை மீறிச் சென்றாலோ, மாணவர் சேர்க்கை இருக்கைகளை ரத்து செய்து விடுவதாக வார்டன் மிரட்டுவதாக தெரிவித்தனர். மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துவதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
உணவில் பூச்சிகள்:
தொடர்ந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசும்போது, எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சோப்பு கிட் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. விடுதியில் வழங்கப்படும் உணவில் பூச்சிகள், முடிகள், கற்கள் போன்றவை அடிக்கடி காணப்படுவதாக தெரிவித்தனர்.
விடுதி வார்டன் செய்யும் கொடுமை குறித்து ஜீவிதா நாகேஷ் என்ற மாணவி கூறுகையில், “வார்டனின் அடாவடித்தனமான நடத்தையை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். வார்டனின் தனிப்பட்ட வேலைகளுக்காக எங்களை பயன்படுத்துகிறார். வார்டன் மற்றும் அவரது குடும்பத்துக்கும் நாங்கள் சப்பாத்தி சமைக்க வேண்டும் என்று விரும்புகிறார். எங்களுக்கான ஹாஸ்டல் உணவைக்கூட வார்டன் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். மேலும், தொற்றுநோய்க்குப் பிறகு படுக்கைகள் மற்றும் கட்டில்கள் சுத்தம் செய்யப்படவில்லை, இதுபோன்ற பராமரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினால், வார்டன் மற்றும் விடுதி அதிகாரிகள் எங்களை விடுதியை காலி செய்யச் சொல்கிறார்கள் அல்லது எங்களது சேர்க்கையை ரத்து செய்வதாக மிரட்டுகிறார்கள்.
மேலும், விடுதி பராமரிப்பு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தால், வார்டன் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பிரச்னைகளை தீர்க்க மறுப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விடுதி அதிகாரிகள் தொடர்ந்து மின்சாரம் துண்டித்து, வைஃபை இணைப்புகளை துண்டித்துவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தாங்களாகவே விடுதி கட்டிடத்தை சுத்தம் செய்யச் சொல்வதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தகாத வார்த்தைகள்:
தொடர்ந்து மற்றொரு மாணவி பேசுகையில், “இந்த விடுதியில் நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்படுகிறோம். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். வார்டன் மற்றும் விடுதி அதிகாரிகளிடம் இருந்து தினமும் நாங்கள் கேட்கும் வார்த்தைகளால், இந்த விடுதியில் உள்ள சிறுமிகளின் மனநலம் சீர்குலைந்து வருகிறது.
பெங்களூரு தெற்கு தாலுகா அதிகாரி மதுரா, “உணவில் பூச்சிகள் அல்லது முடிகள் இருப்பது வழக்கம். அது இரண்டு முறை நடந்திருக்கலாம். சுகாதாரம் தொடர்பாக, வரும் நாட்களில் விடுதி கழிவறைகளை சுத்தம் செய்ய ஒருவரை அவுட்சோர்ஸ் செய்வோம். தொற்றுநோய் காரணமாக மாணவர்களை சுதந்திரமாக கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு நாங்கள் முன்பு கூறியிருந்தோம். நாங்கள் அதையே தொடர்ந்து செயல்படுத்தி வந்தோம். சிறுமிகளிடம் இருந்து தொடர் புகார்களைப் பெற்றுள்ளோம். அவற்றை விசாரித்து வருகிறோம், அதற்கேற்ப தீர்வு காண்போம்” என்று கூலாக பதிலளித்தார்.