Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹேமாமாலின் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு,  ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான 7 நாள் சிறப்பு பூஜைகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இன்று குழந்தை வடிவிலான ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இதைதொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்கு என்ன பூஜைகள் நடைபெற உள்ளன என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


தினசரி பூஜைகளின் விவரம்:


ஜனவரி 18: சடங்குகளின் தொடக்கம்


குடமுழுக்கிற்கான முறையான சாஸ்திர சடங்குகள் என்பது ஜனவரி 18ம் தேதி (நாளை) தான் தொடங்குகிறது. அதன்படி கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறும். 


ஜனவரி 19: ஹோமம் வளர்த்தல்


ஜனவரி 19ம் தேதியன்று ஹோமம் எரியூட்டப்பட்டு, நவக்கிரங்கள் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.


ஜனவரி 20: கருவறையை சுத்தம் செய்தல்


கோயிலின் கருவறை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.


ஜனவரி 21: தெய்வீக குளியல்


125 கலசங்கள் கொண்டு ராம் லல்லா சிலை சுத்தம் செய்யப்படும்


ஜனவரி 22: சிலை பிரதிர்ஷ்டை


காலை பூஜையை தொடர்ந்து மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டம் ஆகியவை சங்கமிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக உள்ளது. பக்தர்கள் மற்றும் பிரமுகர்கள் கூடும் போது, ​​ஒற்றுமை மற்றும் பயபக்தியை நோக்கி ஒரு கூட்டுப் படியைக் குறிக்கும் இந்த விழாவிற்கான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இந்த விழாவிற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் சிறப்பு விரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், இந்த கோயில் குடமுழுக்கு விழாவில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உயரும் என, இந்திய வர்த்தக சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.