இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.  


இந்திய மாணவர் மீது தாக்குதல்


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்திய மாணவரை 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சரமாரியாக தாக்கியிருக்கிறது.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்பிடிப்பு படித்து வருகிறார். இவரது மனைவி சையதா ருக்கிய பாத்திமா.


இவர்கள் இரண்டு பேரும் சிகாகோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 4 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயதங்களுடன் வருவதை பார்த்த சையத் அலி, அவரது வீட்டிற்கு வேகமாக ஓடினார். 


கொள்ளை கும்பல் செய்த கொடூரம்:


இருப்பினும், கொள்ளையர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கி, அவரது செல்போன பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளை கும்பல் தாக்கியதில்  சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. ரத்தம் வழிந்தபடியே அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 






அதில், "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக அடித்தனர். என்னை காப்பாற்றுங்கள்" என்று ரத்தம் வழிந்தப்படி அவர் கூறியிருக்கிறார்.


இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து வரும் நிலையில், தாக்கப்பட்ட இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.