முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. கடந்த 1924ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், 2018ஆம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் யார் என்பதை இன்று மீண்டும் நினைவில் கொள்வோம். 


அடல் பிஹாரி வாஜ்பாய் யார்?


முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். அவர் ஒரு இந்தி கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் நட்சத்திர பேச்சாளராக ஜொலித்தார். ஜனசங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் வாஜ்பாய் என்றே கூறலாம். அடல் பிஹாரி வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 டிசம்பர் 25 அன்று பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை குவாலியர் சமஸ்தானத்தில் ஆசிரியராக இருந்தார். 


வாஜ்பாய் எங்கு கல்வி கற்றார்?


அடல் பிஹாரி வாஜ்யாய் தனது இளங்கலை பட்டத்தை குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் (தற்போது லட்சுமிபாய் கல்லூரி) படித்தார். மாணவப் பருவத்தில் இருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தன்னார்வத் தொண்டராக இருந்து வந்தார். அன்றிலிருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றார். இதற்குப் பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் எம்ஏ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு, கான்பூரில் இருந்தபடியே எல்எல்பி படித்தார்.


அரசியல் வாழ்க்கை:


அடல் பிஹாரி வாஜ்பாய் ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். 1968 முதல் 1973 வரை ஜனசங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து வந்தார். அப்போது, கடந்த 1952 ம் ஆண்டு வாஜ்பாய் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர் தோல்வியை மட்டுமே சந்தித்தார். இதற்குப் பிறகு, 1957ம் ஆண்டு உ.பி.யின் பல்ராம்பூர் தொகுதியில் ஜனசங்க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


1967 முதல் 1977 வரை ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகள் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக இருந்தார். 1977 முதல் 1979 வரை மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இவர், வெளிநாடுகளில் இந்தியா என்ற பெயரை உலக நாடுகளுக்கு பிரபலப்படுத்தினார். அதன்பிறகு, கடந்த 1980ம் ஆண்டு ஜனதா கட்சி மீது அதிருப்தி அடைந்த வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியை நிறுவ உதவினார். இதற்குப் பிறகு, அவர் ஏப்ரல் 6, 1980 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் ஆனார். அதன்பிறகு இரண்டு முறை மக்களவை தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வாஜ்பாய் பிரதமரானது எப்போது..? 



  1. 1996ம் ஆண்டு முதன்முறையாக நாட்டின் பிரதமரானார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது எம்பிக்களின் எண்ணிக்கை அதிகளவில் இல்லாததால், பதவியேற்று வெறும் 13 நாட்களில் இந்த அரசு கவிழ்ந்தது.

  2. கடந்த 1998ம் ஆண்டு வாஜ்பாய் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமரானார். அப்போது சரியாக 13 மாதங்களுக்குப் பிறகு, 1999 இன் தொடக்கத்தில், அவர் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் வீழ்ந்தது.

  3. 1999 ஆம் ஆண்டிலேயே, வாஜ்பாய் தலைமையில் 13 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது அவரது தலைமையிலான அரசு ஐந்தாண்டு பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடித்தது. இதையடுத்து, 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் என்ற பெருமையை பெற்றது. 


 பிரதமராக வாஜ்பாய் செய்த முக்கிய பணிகள்?



  • கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 தேதிகளில் பொக்ரானில் ஐந்து நிலத்தடி அணு சோதனைகளை வெடிக்கச் செய்து இந்தியாவை அணுசக்தி நாடாக அறிவித்தார்.

  • கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சதா-இ-சர்ஹாத் என்ற பெயரில் டெல்லியிலிருந்து லாகூருக்கு (பாகிஸ்தான்) ஒரு பேருந்து சேவையைத் தொடங்கினார்.

  • வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 1990 ஆம் ஆண்டில்தான் கார்கில் போரில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா நிலத்தை மீட்டெடுத்தது.

  • இந்தியாவின் நான்கு மூலைகளையும் (டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை) இணைக்கும் (தங்க நாற்கர திட்டம்) சாலை வாஜ்பாய் காலத்தில்தான் தொடங்கியது. 


அடல் பிஹாரி வாஜ்பாய் எப்படி இறந்தார்?


கடந்த 2009 ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து நட்சத்திர பேச்சாளராக பார்க்கப்பட்டவருக்கு பேச முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 11 ம் தேதி சிறுநீரக தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 16, 2018 ம் தேதி உயிரிழந்தார்.