இந்தியாவில் இன்று (ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை) மிகக் குறைந்தளவு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் வெறும் 89 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. கடைசியாக கடந்த 2020 மார்ச் 27ல் தான் குறைந்த அளவு கொரோனா தொற்று பதிவானது.
இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2035 என்றளவில் உள்ளது. இது வரை நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ண்க்கை 4.46 கோடி (4,46,81,233). கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 5,30,726.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 0.5 சதவீதம் அளவிலும் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.09 சதவீதம் என்றளவிலும் உள்ளது. பாசிடிவிட்டி என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகும் என்பதைப் பொறுத்தது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2020ல் இந்தியாவில் கொரோனா தொற்று 20 லட்சம் எல்லையைக் கடந்தது. ஆகஸ்ட் 23ல் 30 லட்சமாக உயர்ந்தது. செப்டம்பர் 5ல் 40 லட்சமாகவும், செப்டம்பர் 16ல் 50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் புதிய வகை கொரோனா திரிபு வேகமாகப் பரவியதையடுத்து இந்தியாவில் டிசம்பர் 27ல் நாடு தழுவிய மாஸ் டிரில் நடத்தப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தலின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒத்திகை பார்க்கப்பட்டது.
டெல்லியில் பூஜ்ஜியம்:
டெல்லியில் 2020ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 89 புதிய கொரொனா பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதையடுத்து, இது கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் 27 க்கு பிறகு பதிவான குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் ஆகும். அதேபோல், தற்போதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் 2,035 கீழ் பாதிப்புகள் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020ம் ஆண்டுக்கு பிறகு தலைநகர் புதுடெல்லியில் முதல்முறையாக கொரோனா பாதிப்புகள் எதுவும் இல்லை. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு 10 ஆக மட்டும் உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று டெல்லியில் ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் 931 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டது. அதில், ஒரு பாதிப்பு கூட பதிவாகவில்லை.