அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் பகுதியில் இன்று மாலை 4.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிந்தது. 


இந்த நிலநடுக்கம மையமானது பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.


துருக்கி நிலநடுக்கம்:


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து நொருங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 36 மணிநேரத்தில் மட்டும் துருக்கியில் 100 க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 


நிலநடுக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்த்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.






இந்நிலையில், அசாமில் ஏற்பட்டுள்ளது லேசான நிலநடுக்கம் என்றாலும், மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.