Asaduddin Owiasi slams; முதலில் ஆர்.எஸ்.எஸ், மிஷினரி, அரசு பள்ளிகளை கணக்கெடுங்கள் என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.


உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தும், உத்திரகாண்ட்டில் புஷ்கர் சிங் தாமியும் முதல்வர்களாக உள்ளனர்.  உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிகளான ’’மதராஸாக்கள்’’ மட்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. 


உத்திரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடத்திட்டம் மற்றும் எந்த அரசு சாரா நிறுவனத்துடனான அதன் தொடர்பையும் பற்றிய தகவல்களைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்ததை அடுத்து AIMIM தலைவரின் எதிர்வினை வந்துள்ளது. அங்கீகாரம் இல்லாத மதரஸாக்களின் கணக்கெடுப்பின் நோக்கம் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்வதே என்று அரசு தெரிவித்துள்ளது.


உத்தரபிரதேச சிறுபான்மை நலன் மற்றும் முஸ்லிம் வக்ஃப் துறை அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, இடைநிலைக் கல்வித் துறையின் விதிகளின் படி மதரஸாக்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்றவற்றை முறைப்படுத்தவே இந்த கணக்கெடுப்பு என தெரிவித்துள்ளார். 


மேலும், கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் கணக்கெடுப்பு துணை மாஜிஸ்திரேட் (SDM), முதல்நிலைக் கல்வி அதிகாரி (BSA) மற்றும் மாவட்ட சிறுபான்மை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் மூலம் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அறிக்கை கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் (ADM) ஒப்படைக்கப்படும், அதன் பிறகு ADM ஒருங்கிணைந்த அறிக்கைகளை மாவட்ட நீதிபதிகளிடம் (DMs) சமர்ப்பிக்கபட உள்ளது. 






இந்த கணக்கெடுப்பு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான கணக்கெடுப்பு என்றும்,  மதரஸாக்களுக்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் பள்ளிகள், மிஷனரி பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு முன்வருகிறது எனறால் அதனை அனைத்து பள்ளிகளுக்கும் செய்யட்டும் என்றும், அவர் கூறியுள்ளார். மதர்ஸாக்கள் மட்டும் கணக்கெடுக்கப்படுவதில் பாஜகவின் உள்நோக்கம் இருப்பதாகவும். இது, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.