நாட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்தது ஏன்? என பிரதமர் மோடிக்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். டிவிட்டர் இந்த கேள்விகளை எழுப்பியதோடு, அந்த பதிவை பிரதமர் மோடிக்கு டேக்கும் செய்துள்ளார்.
ஓவைசிசியின் 5 கேள்விகள்:
ஓவைசி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பெரும் பொருளாதார நிபுணர் பிரதமர் மோடிக்கு 5 கேள்விகள்
- 2000 ரூபாய் நோட்டை முதலில் எதற்காக அறிமுகம் செய்தீர்கள்?
- 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையையும் விரைவில் எதிர்பார்க்கலாமா?
- 70 கோடி இந்தியர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை, இந்த நிலையில் அவர்கள் எப்படி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வார்கள்?
- உங்களை பணமதிப்பு இழப்பு நடவடிக்கை 1.0 மற்றும் 2.0 செய்ய வைப்பதில், பில் கேட்ஸுக்கு சொந்தமான ”பெட்டர் தன் கேஷ் அல்லையன்ஸ்” நிறுவனத்தின் பங்கு என்ன?
- இந்திய தேசிய கொடுப்பனவு கழக சர்வர்கள் சீனாவால் ஹேக் செய்யப்பட்டதா? அது உண்மையானால், போர் நடைபெறும் காலங்களில் பணப்பரிவர்த்தனைகள் எப்படி நடைபெறும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
திரும்பப் பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்:
நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த சூழலில் தான், பிரதமர் மோடிக்கு அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
2016ம் ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியது. அதுபோன்று, இந்த முறை அதிரடி நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல், செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டை கைவசம் வைத்திருந்தால் அதன் நிலை என்ன என்பதை மத்திய அரசு இதுவரை விளக்கவில்லை.
சாடும் எதிர்க்கட்சிகள்:
2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என குறிப்பிட்டுள்ளார்.