சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள் வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டின் விலை கடந்த மாதம் முதல் உச்சத்தில் உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.500 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பூண்டின் விலை சற்று குறைந்து கிலோ ஒன்று ரூ.430 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விளைச்சல் மற்றும் வரத்து காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், மத்திய பிரதேசத்திலும் பூண்டு ஒரு கிலோ ரூ. 400 முதல் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் பூண்டும் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என இருந்தாலும், ஒரு புறம் வருத்ததில் உள்ளனர். கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பாராத வகையில், தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பல இடங்களில் தக்காளியை திருடர்கள் நூதன முறையில் திருடிய சம்பவங்கள் நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டு பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒரு சில இடங்களில் திருடர்கள் விவசாய நிலத்தில் இருந்து பூண்டை திருடி செல்கின்றனர். இதனை தடுக்க, சிந்த்வாரா பகுதியில் உள்ள வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமிராக்களை நிறுவி கண்காணிப்பு பணியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
இதுபற்றி பூண்டு விவசாயம் செய்து வரும் ராகுல் தேஷ்முக் கூறும்போது, “13 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பூண்டு விவசாயம் செய்துள்ளோம். இதுவரை ரூ.1 கோடிக்கு பூண்டு விற்பனை செய்துள்ளேன். இந்த ஆண்டு பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதே சமயம் பூண்டு திருட்டை தடுக்க சோலார் வசதி கொண்டு நகரும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதே போல அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள், விவசாய நிலத்தில் இருந்து பூண்டு திருட்டை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.