நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியே நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது.


அரவிந்த் கெஜ்ரிவால் கைது:


இந்த வழக்கு ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.


அமலாக்கத்துறையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் ஆம் ஆத்மி அரசுக்கு அடுத்தடுத்து பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நாட்டின் தலைநகரின் முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும்  ஏற்படுத்தியது.


இடைக்கால ஜாமின்:


அவரது கைதுக்கு நாட்டின் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.


நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து, இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார். 


டெல்லி, திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


மேலும் இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்ற கேள்வியை அமலாக்கத்துறை முன்பு நீதிபதிகள் முன்வைத்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் ஆட்சேபனைகள் தெரிவித்தது.