டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனமும், குரலும் எழுந்து வருகிறது. 


நேற்று (மார்ச் 21) இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் விசாரித்த பிறகு அமலாக்கத்துறை கைது செய்தது. மக்களவை தேர்தல் அட்டவணை அறிக்கப்பட்டு, ஏற்கனவே அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு பிறகு இந்திய கூட்டணியில் உள்ள பல எதிர்க்கட்சி தலைவர்கள் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று இங்கே பார்ப்போம்..


மக்களவை தேர்தலில் கெஜ்ரிவால் கைது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..?


ஆம் ஆத்மி கட்சி டெல்லியை கடந்து தற்போது இந்தியா முழுவதும் தனது கால்களை ஊன்றி வருகின்றது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்காக டெல்லி, ஹரியானா மற்றும் குஜராத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில், பஞ்சாபில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 


மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 4, ஹரியானாவில் 1, குஜராத்தில் 2, பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மொத்தம் 20 இடங்களில் ஆம் ஆத்மி பெறும்  வெற்றி, தோல்வி லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.


ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அடியா..?


மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாளே உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தனிப்பட்ட முறையில் பெரும் அடியாக கருதப்படுகிறது. ஆனால், ஆம் ஆத்மி கூட்டணி வைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு சாதகமாக பார்க்கலாம். 


சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவாரா அரவிந்த் கெஜ்ரிவால்..? 


அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு செல்ல நேரிட்டாலும், டெல்லி ஆட்சியை அங்கிருந்து இயக்குவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. ஒரு முதல்வர் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதைத் தடுக்கும் எந்த விதியும் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தினால், அது அவருக்கு எளிதானது அல்ல என்றும் கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆம் ஆத்மிக்கு மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லாதது ஆம் ஆத்மி கட்சிக்கும், இந்திய கூட்டணிக்கு பின்னடைவாக அமையலாம். 


தீவிர கண்காணிப்பில் அரவிந்த் கெஜ்ரிவால்: 


நேற்று இரவு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து, அசாம்பவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அவரது இல்லம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் இல்லம் சுற்றி அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.