விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமும் (APEDA), ஹிமாச்சலப் பிரதேசத் தோட்டக்கலைப் பொருட்கள் சந்தை மற்றும் பதப்படுத்தும் நிறுவனமும் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐந்து தனித்தன்மை வாய்ந்த ஆப்பிள் வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.


மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, விவசாய மற்றும் பதப்படுப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.


ஹிமாச்சலப் பிரதேசத்தின் தனித்துவமான ஆப்பிள் வகைகளான Royal Delicious, Dark Baron Gala, Scarlet Spur, Red Velox & Golden Delicious ஆகியவை முதல்கட்டமாக பஹ்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


டி.எம் எண்டர்ப்ரைஸஸ் என்ற பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் இந்த ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



பஹ்ரைனில் அல் ஜஸீரா குழுமம் நடத்தும் ஆப்பிள் கண்காட்சி ஒன்றில், இந்த ஆப்பிள்கள் வைக்கப்படவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரத் தினத்தன்று நிகழ்வதையும் அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த ஆப்பிள் கண்காட்சியில் பஹ்ரைன் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் விளையும் வெவ்வேறு வகையான ஆப்பிள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இருந்து பஹ்ரைனுக்கு மாம்பழங்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவில் இருந்து வெவ்வேறு நாடுகளுக்கு சமீப காலங்களில் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.


கடந்த ஜூலை மாதம், கிழக்கு இந்தியாவில் இருந்து மாம்பழங்களை அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் முயற்சியில், இந்தியாவில் இருந்து புவிசார்க் குறியீடு அந்தஸ்து பெற்ற பாஸ்லி வகை மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த வகை மாம்பழங்கள் மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் விளைபவை. இவற்றை இந்தியாவின் டி.எம் எண்டர்ப்ரைஸஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்ய, பஹ்ரைனில் அல் ஜஸீரா நிறுவனம் இறக்குமதி செய்தி பெற்றுக் கொண்டது.



விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA) வெவ்வேறு வகையான காய், கனிகளை வெவ்வேறு பகுதிகள், மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து கொள்முதல் செய்து, ஆன்லைனில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும், விழாக்களையும் நடத்தி ஏற்றுமதியை ஊக்குவித்து வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மாம்பழங்களை பஹ்ரைனுக்கு அனுப்புவதற்கு முன்பு, APEDA சார்பாக தோஹா, கத்தார் ஆகிய நகரங்களில் மாம்பழ விற்பனையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் இருந்து சுமார் 9 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவை பேமிலி ஃபுட் செண்டர் என்ற நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டவை.