மார்க்கதர்சி நிறுவனம் சிட் ஃபண்ட் பெயரில் வரலாறு காணாத அளவிற்கு நிதி மோசடி செய்துள்ளதாக, ஆந்திரபிரதேச  காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தீவிர மோசடி தொடர்பான விசாரணை ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வரலாற்றில் மாபெரும் மோசடி:


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர பிரதேச மாநில குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் என் சஞ்சய், மார்கதர்சி நிறுவனம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி “ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நலிவடைந்த மற்றும் அப்பாவி சந்தாதாரர்களைச் சுரண்டுவதன் மூலம் சிட் ஃபண்ட் செயல்பாடுகள் என்ற பெயரில் இதுவரை நடந்த மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகிறோம். மார்கதர்சி சிட் குழுமம் சட்டவிரோதமாக டெபாசிட்களை பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. அதோடு சிட் ஃபண்ட் சட்டம் 1982 இன் மீறல் மூலம், சாமானிய மக்களின் சந்தாக்களில் இருந்து தேவையற்ற பலன்களைப் பெற்றுள்ளது.


சட்டவிரோதமாக வருவாய் ஈட்டியது எப்படி?



  • மார்க்கதர்சி நிறுவனம் தனது துணை நிறுவனங்களுக்கும் மற்ற அறியப்படாத முதலீடுகளுக்கும் ரகசியமாக நிதியை வழங்கியுள்ளது.

  • நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களை மீறி அதிக அளவு பண சந்தாக்களை ஏற்று பணமோசடி செய்தல்

  • வட்டி மற்றும் பாதுகாப்பை வழங்குவதாகக் கூறி ஒழுங்கற்ற முறையில்  சந்தாதாரர்களை அவர்களது பணத்தை  தொடர்ந்து நிறுவனத்திடம் வைத்திருக்குமடி கட்டாயப்படுத்தியுள்ளது

  • மார்கதர்சி குழு இந்த விதி மீறல்களை மோசடியான கணக்குப்பதிவுகள் மூலம் செய்கிறது என்பது முதன்மை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • உதாரணமாக, கிளை அலுவலகங்களில் கையில் காசோலை மற்றும் கையிலே பணம் என்ற நடைமுறையில் பண இருப்புகளை உயர்த்துவது

  • சிட்ஃபண்ட் சட்டத்தின்படி கட்டாய இருப்புநிலைகள் மற்றும் கணக்குகளை கிளை மட்டத்திலோ அல்லது மாநில அளவில் உள்ள சிட்ஸ் பதிவாளரிடம் தாக்கல் செய்வதில்லை

  • புகாரளிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறியக் கடமைப்பட்டுள்ள கட்டுப்பாட்டாளர்களுக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை” என சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.


குற்றப்புலனாய்வுத்துறை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள்:


தொடர்ந்து “7 பிரிவுகளின் கீழ் மார்கதர்சி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து குற்றப்பத்திரிகைகளிலும் அந்நிறுவனத்தின் தலைவரான ராமோஜி ராவ்,  நிறுவன இயக்குனர் சைலஜா கிரண், அந்தந்த கிளைகளின் மேலாளர்கள், மார்கதர்சி நிறுவனம் மற்றும் அதன் முதன்மை பட்டய கணக்காளர் கே.ஸ்ராவன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மார்கதர்சி நிறுவனம் செயல்படும் விதத்தை அறிந்தால், அந்நிறுவனம் செய்துள்ள மோசடியின் அளவை உணர முடியும்.  ஆந்திரபிரதேசத்தில் மட்டும் 37 கிளைகள் உட்பட, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்தம் 108 கிளைகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் சந்தாதாரர்களாக உள்ளனர். 2,351 சிட் குழுக்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 9,677 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை கண்டறியப்பட்டவை:


சந்தாதாரர்களின் பணத்தை மிகவும் ஆபத்தான பங்குச் சந்தைக்கு மாற்றியது. எதிர்கால சந்தாக்களுக்கு எதிரான ரசீது' என்ற போர்வையில் அவர்களுக்கு ஆண்டு வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம் சட்டவிரோதமாக டெபாசிட்களை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது. என பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.


மத்திய விசாரணை அமைப்புகளில் புகார்:


 பணமோசடி, நிதி மோசடி, கார்ப்பரேட் மோசடிகள், பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு அடையாலம் தெரியாத சந்தாதாரர்களுக்கு உதவுதல் மற்றும் வருமான வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறிந்தோம். இந்த விதிமீறல்கள் மத்திய அமலாக்க முகமைகளுக்கு உட்பட்டவை என்பதால், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தீவிர மோசடி தொடர்பான விசாரணை ஆணையம் ஆகிய நிறுவனங்களுக்கு நேரில் சென்று , மார்கதர்சி நிறுவனத்தின் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, ஆந்திர காவல்துறை சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


மார்கதர்சி நிறுவனம் மறுப்பு:


குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்கதர்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவல்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வியக்க வைக்கும் வகையிலான கட்டுக்கதைகள் என்றும், தங்களது நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.