RSS: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த கோயிலுக்குள்ளும் நுழையலாம் என, ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியுள்ளார்.
”சாதிய பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும்”
குஜராத்தின் வதோதராவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மத்தியில், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே உரையாற்றினார். அப்போது, "ஒற்றுமை உணர்வை" ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து, ”எந்த நபருக்கும் எந்த கோயிலுக்குள்ளும் நுழைய உரிமை உண்டு. ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அகற்ற வேண்டும்.
எந்த நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி அல்லது தீண்டாமையின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகளை மட்டும் எதிர்க்காமல் அவற்றை ஒழிக்க தீவிரமாக செயல்பட வேண்டும்.
”வெற்றியின்போது சாதி பார்ப்பதில்லை”
ஆசிய விளையாட்டில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டபோது, அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பற்றி யாரும் கேட்கவில்லை. கொரோனா ஊரடங்கின் போது, ஜாதி அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மக்கள் உதவினார்கள். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானிகளின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி மக்கள் விசாரிக்கவில்லை. நெருக்கடியின் போதும் அல்லது வெற்றியின் போதும் நம் நாடு ஒற்றுமையாக இருப்பதை இது காட்டுகிறது. இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வு நெருக்கடி அல்லது வெற்றியின் போது மட்டுமின்றி, எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் நமது ஒற்றுமையை அப்படியே வைத்திருக்க முடிந்ததால் தான் இந்தியாவால் உலகிற்கு எதையாவது கொடுக்க முடிந்தது
சனாதன குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி:
சனாதன தர்மத்தை அழிப்பதாக சிலர் மிரட்டுகின்றனர். இந்துக்களை பற்றி பேசி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வகுப்புவாதமாக இருப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். சனாதன தர்மம் என்பது சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றியது அல்ல. ஆனால், அது மனிதர்களில் கடவுளைக் காண்பது, நல்ல நடத்தை மற்றும் சமூகத்தின் நலனை அடைவதாகும்.
இந்தியாவும் அதன் மக்களும் யூதர்கள், பார்சிகள் மற்றும் தலாய் லாமா மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விதத்தில், உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. கொரோனா காலத்தில் உலகிற்கு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கினோம். அண்டை நாடான இலங்கையின் அண்மை கால பொருளாதார நெருக்கடியின் போது நாமும் உதவினோம். இதனால் உலகம் ஒரே குடும்பம் என்பதை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. இந்தியாவை உலகத் தலைவர் ஆக்கும் சக்தி இந்து சமுதாயத்திற்கும், இந்திய மக்களுக்கும் உள்ளது. ஒரு நாள் இந்தியா உலகிற்கு வழி காட்டும்” என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசினார்.