Cheetah Dies : தொடரும் மர்மம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு

இதுவரை, 9 சிவிங்கிப்புலிகள் உயிரிழந்த நிலையில், இன்று 10-வது சிவிங்கிப் புலி மரணம் அடைந்துள்ளது.

Continues below advertisement

எந்த வித கட்டுப்பாடும் இன்றி சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டது உள்பட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950களில், சிவிங்கி புலியை அழிந்த இனமாக அறிவிக்கப்பட்டது. 

Continues below advertisement

தொடர்கதையாகும் மரணங்கள்:

இப்படியிருக்க, சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. சிவிங்கி புலிகளை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. அதையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சிவிங்கி புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய் பூங்காவில் விடப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. ஆனால், தட்பவெப்ப நிலை, நோய்த்தொற்று உள்பட பல காரணங்களால் தென்னாப்பிரிக்கா, நமீபியா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதுவரை, 9 சிவிங்கிப் புலிகள் உயிரிழந்த நிலையில், இன்று 10ஆவது சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது. நமீபிய நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு, சௌர்யா என்று பெயரிடப்பட்ட சிவிங்கி புலி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.

10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு: 

இதுவரை, மொத்தமாக ஏழு பெரிய சிவிங்கி புலியும் மூன்று குட்டிகளும் தேசிய பூங்காவில் இறந்துள்ளன. லயன் திட்டத்தின் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர், இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று, ஜனவரி 16ஆம் தேதி, 2024ஆம் ஆண்டு மதியம் 3:17 மணியளவில், நமீபிய நாட்டு  சிவிங்கி புலி செளர்யா உயிரிழந்தது. 

காலை சுமார் 11 மணியளவில், தடுமாறிய நிலையில் சிவிங்கி புலி நடமாடி கொண்டிருந்தது. இதை கவனித்த கண்காணிப்புக் குழு, அதற்கு மயக்க ஊசி செலுத்தி கைப்பற்றியது. அப்போது, அது பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து விலங்கு புத்துயிர் பெற்றது.

ஆனால், புத்துயிர் பெற்ற பிறகும் அதன் உடல்நிலையில் சிக்கல்கள் தொடர்ந்தன. சிகிச்சைக்கு பதிலளிக்கத் தவறியது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி, குனோ தேசிய பூங்காவிவல் ஒன்பதாவது சிவிங்கி புலி உயிரிழந்தது. கடைசியாக இறந்த 2 சிவிங்கி புலியின் மரணத்துக்கு மழைக்காலத்தில் பூச்சிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

 

Continues below advertisement