Simhachalam Temple Accident: சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் திருவிழாவின் போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிம்ஹாசலம் கோயிலில் விபத்து:
ஆந்திரமாநிலம் சிம்ஹாசலத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனோட்சவம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமியின் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 300 ரூபாய் டோக்கன் பெற்றும் பலர் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அப்போது பெய்த மழைகாரணமாக, புதியதாக கட்டப்பட்டு இருந்த சுவர் சரிந்து, 300 ரூபாய் டோக்கன் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்துள்ளது.
பக்தர்கள் 9 பேர் பலி
20 அடி நீள சுவர் இடிந்து விழுந்த இந்த சம்பவத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மீட்கப்பட்டு கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதற்கட்டமாக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் இறந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.
நடந்தது என்ன?
விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலத்தில் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி தனது உண்மையான வடிவத்தில் காணப்படுகிறார். சந்தனோட்சவத்தின் போது சிம்ஹாத்ரி அப்பண்ணாவின் உண்மையான வடிவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை ஒரு மணிக்கு, பூசாரிகள் சுப்ரபாத சேவையுடன் இறைவனை எழுப்பினர். பின்னர், இறைவனின் மீது இருந்த சந்தனம் பிரிக்கப்பட்டது. தனது உண்மையான வடிவத்தில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்த இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜை விழாக்களுக்குப் பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பூசாபதி அசோக் கஜபதிராஜு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதலில் உண்மையான தரிசனம் பெறுவார்கள் என்பது அறியப்படுகிறது. இந்நிலையில் தான் துரதிர்ஷ்டவசமாக, அப்பண்ணா கோயிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்.
அரசு விளக்கம்:
சிம்ஹாசலம் கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சத்ய பிரசாத் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில்பக்தர்கள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். சுவர் இடிந்து விழுந்த பகுதியில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை நாங்கள் வழங்கி வருகிறோம். பக்தர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார். முன்னதாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான கோயிலான திருப்பதியில் கடந்த ஜனவரி மாதமேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.