சமீப காலமாகவே, எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


ஆளுநர் விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இன்று 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வரும் சூழலில், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.


ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு பதவி:


பொதுவாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு பதவி வழங்குவது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுக்கும் விதமாக உள்ளது. முக்கியமான வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதற்கு பலனாகவே ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பதவி வழங்கப்படுகிறது என கருத்து நிலவி வருகிறது.


அந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சையான வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 


அயோத்தி, முத்தலாக், பணமதிப்பிழப்பு வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். அப்துல் நசீர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இவர் ஜனவரி 4ஆம் தேதிதான் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஒரே மாதத்தில் இவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


சர்ச்சையை கிளப்பிய அப்துல் நசீர்:


கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், அகில பாரத ஆதிவக்த பரிஷத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அப்துல் நசீர், "இந்திய சட்ட அமைப்பு காலனித்துவம் வாய்ந்தது. இது, இந்திய மக்களுக்கு ஏற்றதல்ல. சட்ட அமைப்பை இந்தியமயமாக்குவதே காலத்தின் தேவை. மனுவின் படி சட்ட மரபுகள் பற்றிய சிறந்த அறிவை இந்திய சட்ட அமைப்பு தொடர்ந்து புறக்கணிக்கிறது" என்றார்.


மதச்சார்பின்மை, சோஷியலிசம், ஜனநாயகம் ஆகிய பண்புகளை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்பை இந்தியமாக்குவது குறித்து அப்துல் நசீர் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு வழங்கிய பதவிகளை ஏற்றிருப்பதுதான். அயோத்தி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அமர்வை தலைமை தாங்கிய ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பிறகு மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார்.


அமர்வில் இடம்பெற்ற நீதிபதி அசோக் பூஷன், 2021ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற பிறகு, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை ஏற்றார். தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்றாலும் அதில் அரசியல் இல்லாமல் இல்லை எனக் கூறப்படுகிறது. 


தற்போது, ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் ஆளுநராக பதவியேற்கும் நான்காவது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நசீர்.


ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, ​​நீதிபதி எஸ். ஃபசல் அலி 1952 முதல் 1954 வரை ஒரிசாவின் ஆளுநராகவும், பின்னர் 1956 முதல் 59 வரை அசாமின் ஆளுநராகவும் பதவி வகித்தார். நீதிபதி பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு ஆளுநராக 1997ஆம் ஆண்டு எச்.டி. தேவகவுடா அரசால் நியமிக்கப்பட்டார்.