பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.

Continues below advertisement

பட்டாசு ஆலையில் விபத்து 

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் எட்டு பேர் காயமடைந்தனர். எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ரசாயனங்கள் மூலம் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.  காவல்துறை மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ராயவரம் மண்டலம், கோமாரிபாலம் கிராமத்தில் உள்ள லட்சுமி கணபதி பட்டாசு தொழிற்சாலையில் இருந்து தீடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டுள்ளது.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து புகை மண்டலமாக அந்த இடமே காட்சி அளித்துள்ளது. உடனே உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை என்ன சொல்கிறது?

பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததாலோ அல்லது ரசாயனங்களை முறையற்ற முறையில் கையாளுவதாலோ வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் பேசியதாகவும், இறப்புகளுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி முயற்சிகளை ஆய்வு செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த துயர விபத்தில் பல உயிர்கள் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணங்கள், தற்போதைய நிலைமை, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் பங்கேற்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.