மகிந்திரா கார் நிறுவன அதிபரான ஆனந்த் மகிந்திரா உக்ரைன் விவகாரத்தை ஒட்டி இந்தியாவில் மகேந்திரா பல்கலைக்கழகத்தில் ஏன் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கக் கூடாது என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர் என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.


மத்திய அரசே வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயில சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் தான், கார்கிவ் நகரில் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வு தான் காரணம் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். மாணவரின் தந்தை தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் சீட் கிடைக்காமல் உக்ரைன் சென்றார் என்று புலம்பியிருந்தார்.


இந்நிலையில் இந்தியாவில் மருத்துவ சீட்டுக்கு நிலவும் தட்டுப்பாடு குறித்து தனது ட்விட்டரில் பேசியிருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.


அவர் ட்விட்டரில், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வளவு பற்றாக்குறை இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மகிந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்விக்கான வளாகத்தை ஆரம்பிப்பது பற்றி நாம் ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று தனது டெக் மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக மேலாளரும், தலைமைச் செயல் அதிகாரியுமான குருநானியை டேக் செய்து வினவியுள்ளார்.






அவரது இந்த ட்வீட் எப்போதும் போல் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


டிசம்பர் 2021ல் மக்களவையில் மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்த தகவலின்படி, இந்த்யாவில் எம்பிபிஎஸ் கல்வி பயில 88,120 இடங்களும், பல் மருத்துவம் பயில 27, 498 இடங்களுமே உள்ளன. ஆனால் மருத்துவக் கணவுடன் கடந்தாண்டு நீட், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 1.3 மில்லியன் மாணவர்கள்.