டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றை சுத்தம் செய்து லண்டன் தேம்ஸ் நதி போல் ஆக்குவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பொய் வாக்குறுதி அளித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாவங்களை கழிக்க கும்பமேளாவுக்கு போய் நீராடும் படி விமர்சித்துள்ளார்.


"பாவத்தை போக்க இதை பண்ணுங்க"


அடுத்த மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெல்லியை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இணைந்து களம் கண்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலை தனித்தனியே சந்திக்கின்றன. இவர்களை தவிர மத்தியில் ஆளும் பாஜக இந்த இரண்டு கட்சிகளும் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கெஜ்ரிவால் மீது அமித் ஷா அட்டாக்:


27 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய தலைநகரில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமித் ஷா, "அவர் (கெஜ்ரிவால்] ஏழு ஆண்டுகளில் யமுனை நதியை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றியமைப்பதாக உறுதியளித்தார்.


டெல்லிவாசிகள் முன்னிலையில் யமுனையில் நீராடுவேன் என்றும் கூறினார். யமுனையில் நீங்கள் (கெஜ்ரிவால்) நீராடுவீர்கள் என டெல்லி மக்கள் காத்திருக்கிறார்கள். யமுனையில் இல்லையென்றால், அவர் மகாகும்பத்திற்குச் சென்று, தனது பாவங்களைப் போக்க அங்கு நீராடலாம்.


அரசு பங்களாவை எடுக்க மாட்டேன் என சொன்னதை மீறி 50,000 சதுர அடியில் "ஷீஷ் மஹால்" கட்ட ரூ. 51 கோடி செலவு செய்தார் கெஜ்ரிவால். வாக்குறுதிகளை அளித்து, நிறைவேற்றாமல், பொய்யான முகங்களை மக்களிடம் காட்டும் அரசை டெல்லியில் கெஜ்ரிவால் நடத்துகிறார். எனது அரசியல் வாழ்க்கையில், இவ்வளவு தெளிவாக பொய் சொல்பவர்களை நான் பார்த்ததில்லை" என்றார்.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்