கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்:

21ஆவது உலக காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியக் குழு 613 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பர்மிங்காம், அலபாமா, அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள இந்திய காவல்படை மற்றும் தீயணைப்புத் துறையினர், தங்களது திறமைகளை திறம்பட வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்:

அகில இந்திய காவல் துறை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தப் போட்டிகளில், காவல் துறையைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவிலிருந்து குறைந்தபட்சம் ஒரு தடகள வீரராவது பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில், திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள இந்தியக் குழுவினருக்கு 4,38,85,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அடுத்த உலக காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்தப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், கெவாடியா போன்ற நகரங்களில் நடத்தப்படும் என்று அவர் கூறினார். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

 

வரும் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏல நடைமுறைகளில் இந்தியா பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். விளையாட்டுத்துறையின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.