அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர், தன்னுடைய காதலி கருகலைப்பு செய்து கொண்டதால் அவரையும் சுட்டு தானும் சுட்டு கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸில் கருக்கலைப்பு மேற்கொள்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கருக்கலைப்பு மேற்கொள்ள அவர் வேறு மாகாணத்திற்கு சென்றிருக்கிறார்.
அமெரிக்காவில் அதிர்ச்சி:
குற்றவாளியின் பெயர் ஹரோல்ட் தாம்சன். இவருக்கு வயது 22. கேப்ரியல்லா கோன்சலஸ் என்ற தன்னுடைய காதலியை வணிக வளாகம் ஒன்றில் வைத்து கொலை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலராடோவில் கருக்கலைப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
எனவே, கருக்கலைப்பு மேற்கொள்ள கிட்டத்தட்ட 800 மைல்கள் பயணம் செய்து, கொலராடோவுக்கு சென்ற கோன்சலஸ் முந்தைய நாள் மாலைதான் டெக்சாஸ் திரும்பினார். டெக்சாஸில், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டாலன்றி ஆறு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும்.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், "குற்றம்சாட்டப்பட்டவரே, குழந்தையின் தந்தை என்று நம்பப்படுகிறது. கோன்சலஸ் கருக்கலைப்பு செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. வணிக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில், தம்பதியினர் சண்டையிடுவது பதிவாகியுள்ளது.
தாம்சன் கோன்சலஸை அழைத்துச் சென்று அவரை கழுத்தை நெரித்துள்ளார். கோன்சலஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து விலகி சென்றுள்ளார். தாம்சன் அந்த இடத்தில் துப்பாக்கியை உருவி, கோன்சலஸை தலையில் சுட்டதாகக் கூறப்படுகிறது. தப்பிச் செல்வதற்கு முன், அவர் தரையில் கிடந்த அவரை மீண்டும் சுட்டுக் கொன்றார்.
காதலிக்கு நேர்ந்த கொடூரம்:
இதில் சம்பவ இடத்திலேயே கொன்சாலஸ் பலியானார். முன்னதாகவே, தாம்சன் ஒரு பெண் குடும்ப உறுப்பினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் கோன்சலஸாக இருக்கலாம் என கூறப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட தன்பாலின திருமண உரிமை, கருத்தடை உரிமை ஆகியவையும் பறிபோகும் சூழல் உருவானது. இந்த உரிமைகள் எந்த அளவுக்கு ஆபத்தில் இருக்கிறது என்பது கருகலைப்பு உரிமையை ரத்து செய்த நீதிபதிகளின் தீர்ப்பை படித்தால் தெரிந்துவிடும்.
தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி சாமுவேல் அலிட்டோ எழுதிய தீர்ப்பில், "கருகலைப்பை தவிர்த்து மற்ற விவகாரங்களில் சந்தேகம் எழுப்ப இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்து விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் எழுதிய தீர்ப்பில், "18 நூற்றாண்டில் அரசியலமைப்பை வகுத்தவர்கள் நிலைநாட்டாத உரிமைகள் யாவும் எதிர்காலத்தில் வழக்குகளை தொடுப்பதன் மூலம் பறிக்க முடியும்" என குறிப்பிட்டிருந்தார்.