Amazon : அமேசானில் டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மசாலா பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம் இல்லையா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்தேறியுள்ளது. 


ஆர்டர் மாற்றம்


அதன்படி, மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் அமேசானில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்தது என்னவோ டூத் பிரஷாக இருந்தாலும் அவர்களுக்கு வந்தது மசாலா பொடி பாக்கெட்டுகள்.  இவர்  ரூ.12,000 மதிப்புள்ள எலெக்ட்ரிக் டூத் பிரஷை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணின் மகள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனது தாய் கேஷ் அமேசானில் டூத் பிரஷ் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் பார்சல் மிகவும் எடை குறைவாக இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் பணத்தை கொடுப்பதற்கு முன்பு பெட்டிகளை திறந்து பார்த்தோம். அதில் டூத் பிரஷ்க்கு பதில் மசாலா பொருள் பாக்கெட்டுகள் இருந்தது பொரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.






மேலும், ஒரு வருடத்திற்கு மேலாக நாங்கள் அமேசானில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறோம். இதுபோன்று நடந்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை கொடுப்பதாகவும் இதுபோன்று வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விற்பனையாளரை நீங்கள் ஏன் நீக்கவில்லை” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மற்றொரு சம்பவம்


இதுபோன்று சமீப காலமாகவே நடைபெற்று வருகிறது. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது. அது ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு உருளைக் கிழங்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.  அவர் ஃபிலிப்கார்ட்டின் Open Box Delivery என்ற முறைப்படி, One-time password (OTP) பதிவு செய்து பேக்கேஜை திறந்து பார்த்துள்ளார். அப்போது, ட்ரோன் கேமராவுக்கு பதிலாக, ஒரு கிலோ உருளைக் கிழங்கு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். 


பயனர்கள் எதை ஆர்டர் செய்கிறார்களோ அதை நன்றாக கவனித்து ஆன்லைன் வணிக நிறுவனங்கள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.