(Source: ECI/ABP News/ABP Majha)
இவருக்கு இந்திய பிரதமராக வருவதற்கு தகுதி உண்டு..திமுக முக்கியமான கட்சி...நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென் கருத்து..!
மோடிக்கு எதிராக மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்த வரிசையில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா செனும் சேர்ந்துள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 18 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான பரபரப்பு இப்போதே தொற்றி கொண்டது.
கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என பலவேறு மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்படி, பெரும்பாலான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது. இதற்கு, பல பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதில் முக்கியமான பெயர்தான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்த வரிசையில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா செனும் சேர்ந்துள்ளார்.
"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்தியாவின் அடுத்த பிரதமராகும் திறனைக் கொண்டுள்ளார். ஆனால், அவரால் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி சக்திகளை ஒன்று திரட்டி முடியுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்" என அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு சாதகமான ஒரு குதிரைப் போட்டியாக இருக்கும் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பல பிராந்தியக் கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் நினைப்பது தவறு.
திமுகவும், திரிணாமுல் காங்கிரஸும் முக்கியமான கட்சிகள் என்று நான் நினைக்கிறேன். சமாஜ்வாதி கட்சிக்கு என இருப்பு உள்ளது. ஆனால், அதை விரிவாக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இந்துக்களின் பக்கம் இருப்பது போன்ற பார்வையை பாஜக உருவாக்கிவிட்டதால் பாஜகவின் இடத்தைப் பிடிக்க வேறு எந்தக் கட்சியும் இல்லை என்ற பார்வையை கொள்வது தவறு. பாஜக வலுவாகவும், வலிமையாகவும் தோற்றமளித்தாலும் அதற்கும் பல பலவீனங்கள் உள்ளன" என்றார்.
காங்கிரஸ் குறித்து பேசிய சென், "அக்கட்சி பலவீனமாக உள்ளது. இருப்பினும், அகில இந்திய அளவில் தொலைநோக்கு பார்வையை கொண்ட ஒரே கட்சி அதுதான்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள மம்தா பானர்ஜி, "அமர்த்தியா சென் உலகப் புகழ்பெற்ற அறிவுஜீவி. அவருடைய நுண்ணறிவு நமக்குப் பாதையைக் காட்டுகிறது.
அவருடைய அறிவுரை நமக்கு ஒரு கட்டளை. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அவரது நுண்ணறிவு மற்றும் மதிப்பீடு அனைவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.