கடந்த 2007 ஆம் ஆண்டு ஆந்திராவில் நக்சல் தடுப்புப் போலீஸார் ஒரு பழங்குடியின கிராமத்தில் துப்பாக்கி முனையில் 11 பெண்களை 13 போலீஸார் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 13 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் 13 போலீஸாரையும் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததாகக் கூறிய நீதிமன்றம் அவர்களை மாநில அரசு தண்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட 11 பெண்களுக்கும் அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தான் இந்த கோர சம்பவம் நடந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் வயல் வேலைக்குச் சென்ற நிலையில் 13 போலீஸார் கிராமத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த 11 பெண்களையும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். துப்பாக்கி முனையில் மிரட்டி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பின்னர் மதியம் கிராமத்து ஆண்கள் வந்ததும் அவர்களிடம் நடந்ததைக் கூறிய பெண்கள் கதறி அழுதுள்ளனர். அனைவரும் இணைந்து கிராமத் தலைவர் மூலமாக தொகுதி எம்எல்ஏ எல் ராஜா ராவை சந்தித்துள்ளனர். அவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். அவரிடம் தங்களுக்கு நேர்ந்த அவலத்தைக் கூறியுள்ளனர். அவர் உடனே அவர்களை துணை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றார். துணை ஆட்சியர் நடந்தவற்றை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அறிந்து கொண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி போலீஸார் ஐபிசி 376 சட்டப்பிரிவு 2ஜி மற்றும் 32வி, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


விசாகப்பட்டினம் ரூரல் எஸ்பி ஆனந்த ராவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவருக்குப் பதிலாக சிவானந்த ரெட்டி விசாரணை அதிகாரியாக மாற்றப்பட்டார். வழக்கு விசாரணையின் போதே ரெட்டி விருப்ப ஓய்வு பெற்றார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துவிட்டார். 2019ல் நாண்டியால் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் அதில் வெற்றி பெறவில்லை. 


இந்த வழக்கில் நக்சல் தடுப்பு போலீஸார் சார்பில் ஆஜரான காவலர்கள், மாவோயிஸ்டுகள் மிரட்டலுக்குப் பயந்து பெண்கள் போலி புகார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் நக்சஸ் தடுப்பு நடவடிக்கையைத் தடுக்கவே அவர்கள் அவ்வாறு செய்தனர் என்று வாதாடினர். மேலும் அப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் உறுதி செய்யப்படவில்லை என்றும் வாதாடினர்.


பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்சி, எஸ்டி அமைப்புகள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றம் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் பலாத்காரத்தை உறுதி செய்யவில்லை என்பதை ஏற்றது. அப்போது போலீஸார் தங்கள் மீதான் வழக்கை ரத்து செய்யக் கோரினார். ஆனால் அதற்குள் அந்தப் பெண்கள் உச்சநீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் எஸ், எஸ்டி சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமாறும் விரைந்து நடத்துமாறும் உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் வாதிட பிரபல வழக்கறிஞர் சங்கர ராஜேந்திர பிரசாத் ஆஜரானார். அவர் போலீஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் ட்யூட்டி ரெஜிஸ்டரை வழங்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அடையாள அணிவகுப்பை கூட விசாரணை அதிகாரிகள் நடத்தவில்லை என்று கூறினார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததாகக் கூறிய நீதிமன்றம் அவர்களை மாநில அரசு தண்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதேவேளையில் பாதிக்கப்பட்ட 11 பெண்களுக்கும் அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆதாரங்கள் இல்லாததால் 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.