மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏபிபி செய்தியாளரை திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 


நேற்றைய தினம் லக்கிம்பூர் கேரியில் ஆக்ஸிஜன் கருவியை துவக்கி வைக்க அமைச்சர் அஜய் மிஸ்ரா வருகை தந்தார். அப்போது ஏபிபி குழும செய்தியாளர், லக்கிம்பூர் சம்பவ விசாரணை குழு அறிக்கையை குறிப்பிட்டு அமைச்சரின் மகன் குறித்து கேள்வி எழுப்பினார். 


இதனைக் கேட்டு கோபமான அமைச்சர், “ இது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர்கள் என்றும் நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா?  திருடர்களே” என்று கூறியதோடு ஏபிபி செய்தியாளரின் மைக்கையும் பறிக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. 






 


இந்த வீடியோ மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கம் அமைச்சரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தியுள்ளது. 






 


முன்னதாக, உத்திரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 4 விவசாயிகள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திட்டமிடப்பட்ட சதி என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். 


இந்த விவகாரத்தில்,   நேற்று காலை  மக்களவையில் ராகுல்காந்தி தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் ஆனால் மோடி அதனை விரும்பவில்லை என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர் வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு எப்படி நிர்பந்திக்கப்பட்டதோ, அதே போல அமைச்சரையும் நீக்கும் என்றும் சாடினார்.