Air Pollution Life Expectancy: காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆயுட்கால குறைவானவது, நீர் மாசுபாட்டால் ஏற்படுவதை விட 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
குறையும் இந்தியர்களின் ஆயுட்காலம்:
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 3.5 ஆண்டுகள் குறைவதாக, அதிர்ச்சிகர தகவல் ஒன்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குழந்தைப் பருவம் மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைப்பாட்டின் காரணமாக ஏற்படுவதை விட இரண்டு மடங்கு அதிகம் என சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆயுட்கால சரிவானது, பாதுகாப்பற்ற நீர், சுகாதாரம் மற்றும் கைகழுவதல் ஆகியவற்றால் ஏற்படுவதை காட்டிலும் 5 மடங்கும் அதிகம் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
3.5 ஆண்டுகளை இழக்கும் இந்தியர்கள்..
குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 1.6 ஆண்டுகளையும், புகையிலை பயன்பாடு காரணமாக 1.5 ஆண்டுகளையும், பாதுகாப்பற்ற தண்ணீர், சுகாதாரம் மற்றும் முறையாக கை கழுவாததன் காரணமாக 8.4 மாதங்களையும் சராசரியாக இந்தியர்கள் சராசரியாக தங்களது வாழ்வில் இழப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் வாழ்க்கை குறியீடு தொடர்பான தரவுகளின்படி, உலகின் மிகவும் மாசடைந்த பிராந்தியமாக வட இந்தியாவை குறிப்பிடுகின்றன.544.4 மில்லியன் அல்லது 38.9 சதவிகித இந்தியர்கள் மிகவும் மோசமாக மாசுபட்ட சூழலில் வசிக்கின்றனர். இந்த தரவுகளானது 2022ம் ஆண்டுடன் ஒப்பிடப்பட்ட 2023ம் ஆண்டு தரவுகள் அடிப்படையிலானதாகும்.
எந்த மாநில மக்கள் அதிக ஆயுட்காலத்தை இழக்கின்றனர்?
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காற்றின் தர வாழ்க்கை குறியீடு அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பான அளவு என குறிப்பிட்டதை காட்டிலும் அதிகளவில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதால், டெல்லி மக்கள் தங்களது வாழ்நாளில் அதிகபட்சமாக 8.2 ஆண்டுகளை இழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பீகார் மக்கள் 5.6 ஆண்டுகளையும், ஹரியானா மக்கள் 5.3 ஆண்டுகளையும், உத்தரபிரதேச மக்கள் 5 ஆண்டுகளையும் காற்று மாசுபாடு காரணமாக தங்களது ஆயுட்காலத்தில் இழக்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மக்கள் 3.3 ஆண்டுகளையும், மத்திய பிரசே மக்கள் 3.1 ஆண்டுகளையும், மகாராஷ்டிரா மக்கள் 2.8 ஆண்டுகளையும் ஆயுட்காலத்தில் இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
140 கோடி மக்களும் ஆபத்தில்..
இந்தியாவின் 140 கோடி மக்களும் உலக சுகாதார அமைப்பு அனுமதித்த அளவை காட்டிலும், அதிகமான மாசுபட்ட காற்றையே சுவாசிக்கின்றனராம். மிகவும் தூய்மையான பகுதிகளில் கூட, மாசுபாடு அனுமதிகப்பட்ட அளவிற்குக் குறைக்கப்பட்டால் ஆயுட்காலம் 9.4 மாதங்கள் அதிகரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் சற்றே குறைந்து இருந்தாலும், 2023ம் ஆண்டில் தெற்காசியாவில் மாசுபாடு 2.8% அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பகுதி உலகிலேயே மிகவும் மாசுபட்ட பகுதியாக உள்ளது, இதன் ஆயுட்காலம் சராசரியாக 3 ஆண்டுகள் குறைகிறது. கூடுதலாக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8 ஆண்டுகளுக்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
அரசு தீர்வு காணுமா?
ஊட்டச்சத்து குறைபாட்டை காட்டிலும் மிக மோசமான பிரச்னையாக காற்று மாசுபாடு உருவெடுத்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதோடு, பொதுமக்களும் சுயகட்டுப்பாடுகளை பின்பற்றி, காற்று மாசுபாட்டை குறைக்க பங்காற்ற வேண்டியுள்ளது. தினசரி வாகன பயன்பாடு தொடங்கி, வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது வரையிலான ஏட்டில் உள்ள பல திட்டங்களை செயல்படுத்தினாலே, காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்க முடியும் என்பது கள எதார்த்தமாக உள்ளது.