மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் விமானத்தில் மது அருந்தியது ஏன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சம்பவ தினத்தன்று சங்கர் மிஸ்ரா எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து சக பயணி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


சம்பவத்தன்று சங்கர் மிஸ்ரா தெளிவில்லாமல் இருந்தார். பலமுறை மதுபானம் அருந்துவிட்டு ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததாக அந்த விமானத்தில் பயணித்த சுகதா பட்டாசார்ஜி கூறியுள்ளார்.


அமெரிக்காவில் மருத்துவராக இருப்பவர் சுகதா. சம்பவ தினத்தன்று சங்கர் மிஸ்ராவுக்கு அருகே விமானத்தில் அமர்ந்திருந்த சுகதா, அவரின் நிலை குறித்து விமான குழுவிடம் தெரியப்படுத்தியுள்ளார். "அவர் என்னிடம் ஒரே கேள்வியை பலமுறை கேட்டபோது, ​​அவர் தெளிவற்று இருப்பதை உணர்ந்தேன். நான் விமான குழுவினரிடம் புகார் அளித்தேன். ஆனால், அவர் சிரிக்கதான் செய்தார்.


நீண்ட நேரமாக பணியாற்றியதால் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் நன்றாக தூங்குவதற்காக குடித்தேன் என்றும் சங்கர் மிஸ்ரா கூறினார்" என சுகதா தெரிவித்துள்ளார்.


இந்த உரையாடலுக்கு பின்னர்தான், அவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால், ஒரு வாரமாக குற்றம்சாட்டப்பட்ட மிஸ்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.


பாதிக்கப்பட்ட மூதாட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதிய பிறகுதான், நடவடிக்கை எடுக்கப்பட்டது.  


சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என அந்த மூதாட்டி விமான குழுவிடம் கூறியுள்ளார். எனவே, அவருக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது இருக்கைக்குத் திரும்பும்படி மூதாட்டியிடம் விமான பணியாளர்கள் கூறியுள்ளனர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்திருக்கின்றனர்.


அதே இருக்கையில் அமர்வதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, அவருக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் அங்கேயே அவர் படுத்து உறங்கி இருக்கிறார். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் அவருக்கு மாற்று இருக்கை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.