ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளி ஆகியவை உலகளாவிய விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துவதால், ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத்தில் பல சர்வதேச வழித்தடங்களைக் குறைத்துள்ளது
ஐரோப்பா மற்றும் ஆசிய விமான வழித்தடங்கள் குறைப்பு:
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைக் குறைப்பு நடவடிக்கை ஐரோப்பா மற்றும் ஆசிய வான்வழிப் போக்குவரத்து வலைப்பின்னல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லி - பாரிஸ் இடையேயான வாராந்திர விமான சேவைகள் 14-லிருந்து 7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இது தவிர, ரோம், சூரிச், வியன்னா, கோபன்ஹேகன் மற்றும் மிலன் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகளுக்கான சேவை பாதிப்பு
ஆசிய பிராந்தியத்தில், குறிப்பாக சிங்கப்பூர் வழித்தடத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி - சிங்கப்பூர் இடையேயான வாராந்திர சேவைகள் 24-லிருந்து 14-ஆகவும், மும்பை - சிங்கப்பூர் சேவைகள் 14-லிருந்து 7-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை - சிங்கப்பூர் இடையேயான விமான சேவைகள் ஆகஸ்ட் மாதம் வரை முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் மற்றும் கோலாலம்பூர் நகரங்களுக்கான சேவைகளும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடுகளுடனான போக்குவரத்து பாதிப்பு
இந்தியாவின் அண்டை நாடுகளுடனான விமான இணைப்பும் தற்போது பலவீனமடைந்துள்ளது. மும்பை - டாக்கா இடையேயான விமான சேவைகள் ஆகஸ்ட் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், டெல்லி - மாலே (மாலைத்தீவு) சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இலங்கையின் கொழும்பு நகரங்களுக்கான விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கான ஏர் இந்தியாவின் தீர்வு
இந்தச் சேவை குறைப்பால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் விரும்பினால் கூடுதல் கட்டணமின்றி பயணத் தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது செலுத்திய முழுத் தொகையையும் திரும்பப் (Full Refund) பெற்றுக்கொள்ளலாம். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை விமான நிறுவனத்தின் இணையதளம் வழியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
