சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு சோதனையின்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசிய சம்பவம் அவரையில் சிக்கலில் கொண்டுபோய் தள்ளியுள்ளது.
பயணியின் கேள்வியால் ஆடிப்போன விமான நிலையம்: கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்லவிருந்த பயணி மனோஜ் குமார். இவரின் வயது 42. எக்ஸ்ரே பாதுகாப்பு சோதனையின்போது, தன்னுடைய பையில் குண்டு இருக்கிறதா? என பாதுகாப்பு அதிகாரியிடம் மனோஜ் குமார் கேட்டுள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாக பேசியதாகக் கூறி அவர் மீது பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து கொச்சி விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "பயணியையும் அவரது பைகளையும் வெடிகுண்டு நிபுணர் குழு (BDDS) முழுமையாக ஆய்வு செய்தனர். தேவையான சோதனைகளை முடித்த பிறகு, எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்காக உள்ளூர் காவல்துறையிடம் மனோஜ் குமார் ஒப்படைக்கப்பட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனையில் பரபரப்பு: அனைத்து விதமான பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தாமதங்களைத் தவிர்க்க, திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளை கொச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, விமானத்தில் தொடர் சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்தாண்டு, ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.