குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகும்போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த விமானம், குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விபத்து நடந்தது எப்படி?
விமானம் விழுந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்த வண்ணம் உள்ளது. அதன் காட்சிகள் வெளியாகி வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான குழுவினர் உள்பட குறைந்தது 242 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இன்று மதியம் 1:17 மணிக்கு விமான டேக் ஆஃப் ஆனதாகவும் புறப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் விமானம் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. 825 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன?
விபத்து நடந்ததை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்லும் அனைத்து வழிகளையும் காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அந்த இடத்தைச் சுற்றி நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க மீட்பு படை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகளும் மருத்துவ குழுவும் சென்றுள்ளது.
காயமடைந்த பல பயணிகள் ஏற்கனவே அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட AI171 விமானம் இன்று, (ஜூன் 12, 2025) விபத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து விவரங்களை உறுதிசெய்து வருகிறோம். மேலும், விரைவில் கூடுதல் செய்திகளை பகிர்ந்து கொள்வோம்" என குறிப்பிட்டுள்ளது.
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்:
விபத்து குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் மிகுந்த கவனமாக இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன்.
விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு அமைப்புகளை விரைவாகவும், ஒருங்கிணைந்து செயல்படவும் உத்தரவிட்டுள்ளேன். மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்த அனைவருக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமித் ஷாவுக்கு போன் போட்ட பிரதமர்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் விபத்து குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். அகமதாபாத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்களின்படி, விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 110 உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.