Harsh vardhan: பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மீண்டும் தனது மருத்துவர் பணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.


”அரசியலில் இருந்து விலகுகிறேன்” - ஹர்ஷ்வர்தன்:


மத்திய முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,முப்பது ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற தேர்தல் வாழ்க்கைக்குப் பிறகு, ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நான் முன்மாதிரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கட்சி அமைப்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தேன். 


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கான்பூரில் உள்ள GSVM மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, ​​ஏழைகளுக்கும், எளியோர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைமையின் வற்புறுத்தலின் பேரில்தான் நான் தேர்தல் களத்தில் குதித்தேன். அரசியல் என்பது நமது மூன்று முக்கிய எதிரிகளான வறுமை, நோய் மற்றும் அறியாமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பைக் தருகிறது என்ற நம்பிக்கையை அவர்கள் தந்தனர்.


”மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்புகிறேன்”


நான் டெல்லி சுகாதார அமைச்சராகவும், இரண்டு முறை மத்திய சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினேன், இது என் மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயமாகும். போலியோ இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கு முதலில் உழைக்கவும், கொரோனா தொற்றின்போது மக்களின் ஆரோக்கியத்தைப் பேணவும் எனக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது.  நான்  பல வெற்றிகளைப் பெற்று, நிறைவான அரசியல் வாழ்க்கையை நடத்த, ​​பாறையைப் போல என்னுடன் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. தற்போது நான் செல்கிறேன், என்னால் காத்திருக்க முடியாது.  எனக்கு ஒரு கனவு உள்ளது. கிருஷ்ணா நகரில் உள்ள எனது ENT மருத்துவமனை நான் திரும்புவதற்காக காத்திருக்கிறதுஎன ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


தேர்தலில் வாய்ப்பு மறுத்த பாஜக:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய டெல்லி சாந்தினி சவுக் தொகுதி மக்களவை உறுப்பினரான ஹர்ஷ்வர்தனுக்கு மீண்டும், தேர்தலில் போட்டியிட வாய்ப்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஹர்ஷ்வர்தன் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லியின் மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீரும் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கி, அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததன் காரணமாகவே, கம்பீரும் அரசியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.