VK Pandian IAS: தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி. கே. பாண்டியனுக்கு, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவியை முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார்.


வி.கே. பாண்டியன் ஐ.ஏ.எஸ்:


தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி. கார்த்திகேய பாண்டியன் கடந்த 2000ஆவது ஆண்டு பேட்ச்சில், ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சிகளை முடித்துக் கொண்டு 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றார். அடுத்த 9 ஆண்டுகள் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். பின்பு, கடந்த 2011ஆம் ஆண்டு முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பொறுப்பேற்றதோடு, அவரது வலது கரமாகவும் திகழதொடங்கினார் பாண்டியன்.


விருப்ப ஓய்வு பெற்ற பாண்டியன்: 


தொடர்ந்து ஒடிசா அரசிலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள்  மத்தியிலும், முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக வி. கே. பாண்டியன் உருவெடுத்தார். இந்நிலையில் தனக்கு விருப்ப ஓய்வு வேண்டும் என கடந்த 20ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதையேற்று அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


கேபினெட் அமைச்சர் அந்தஸ்து:


இந்நிலையில் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட  உத்தரவில், "மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதலமைச்சருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வி. கே. பாண்டியன் முன்னெடுத்த திட்டம்:


t'ransparency, 't'eamwork, 't'technology மற்றும் 't'ime மற்றும் 't' ransformation-ஐ குறிப்பது தான் 5டி திட்டம். இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதிகாரியாக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கூடுதல் அதிகாரத்துடன் செயல்படுவார் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒடிசாவில் ஏற்கனவே 4,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள்,  புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பட்நாயக் அரசு தெரிவித்துள்ளது.


எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:


”அடுத்த தேர்தலுக்கு முன்பு ஒடிசாவின் முதலமைச்சராக பாண்டியன் பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலகா தெரிவித்துள்ளார்.  ”அரசியலில் இறங்குவதற்காகவே பாண்டியன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகவும், இப்போது, அவரால் ஐஏஎஸ் முகமூடியுடன் இல்லாமல் வெளிப்படையாக அரசியல் செய்ய முடியும். ஆனால் அவரை ஒடிசா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ஒடிசா பாஜக தலைமைக் கொறடா மோகன் மஜி விமர்சித்துள்ளார்.