Railway: பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, போர்வைகள் மாதத்திற்கு இரண்டு முறை துவைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


சர்ச்சையில் ரயில்வே துறை:


ரயில் பயணிகளுக்கு ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளி போர்வைகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது. ஏ.சி., கோச் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போர்வைகள் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படுகிறது என, நாடாளுமன்றத்திலேயே ரயில்வே அமைச்சர் விளக்கமளித்து இருந்தார். இது, ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தூய்மைப்படுத்தப்படாத கம்பளிகளை பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 



வடக்கு ரயில்வே விளக்கம்:


இந்த  நிலையில் தான், 15 நாட்களுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படுவதாகவும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சூடான நாப்தலீன் நீராவியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுவதாகவும் வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு மற்றும் திப்ருகர் ராஜ்தானி ரயில்களில் உள்ள அனைத்து போர்வைகளையும்,  புற ஊதா ரோபோ சுத்திகரிப்பு மூலம் ஒவ்வொரு சுற்று பயணத்திற்குப் பிறகும்  தூய்மையாக்கும் சோதனை முயற்சி விரைவில் தொடங்கப்படும் என்றும்  வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. UV ரோபோடிக் சுத்திகரிப்பு முறையானது,  கிருமிகளைக் கொல்ல புற ஊதா ஒளியைப் பயன்படுத்துகிறது.


பயன்பாட்டு விதிகள்:


வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், சூடான நாப்தலீன் நீராவியின் பயன்பாடு நேரத்தைச் சோதித்த மற்றும் பயனுள்ள சுத்திகரிப்பு முறையாகும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் இயந்திரமயமாக்கப்பட்ட சலவைக் கூடங்களில் பருத்தி துணிகள் துவைக்கப்படுகின்றன. மேலும் பயன்பாட்டிற்கு முன்னர் இவை 'வைட்டோமீட்டர் சோதனையில்' தேர்ச்சி பெற வேண்டும் என்றார். மேலும், "2010-க்கு முன், கம்பளி போர்வைகள் 2-3 மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும். பின்னர் இது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது, இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படுகிறது. எங்களுக்கு லாஜிஸ்டிக் சவால்கள் உள்ள இடங்களில், அனைத்து போர்வைகளும் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் துவைக்கப்படும். ஒரு விதிவிலக்கு, ஆனால் வழக்கம் அல்ல" என்று வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு ரயில்வே சொல்வது என்ன?


வடகிழக்கு எல்லை ரயில்வேயின் சிபிஆர்ஓ கபிஞ்சல் கிஷோர் ஷர்மா கூறுகையில், ”ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் வழக்கமாக குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். தேவைப்படின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் போர்வைகள் துவைக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.


இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகளை வழங்குகிறது. வடக்கு ரயில்வே மண்டலத்தில், ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகள் மற்றும் படுக்கை ரோல்கள் விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 15 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், தூய்மையான மற்றும் சுகாதாரம் மிக்க பொருட்களை பயணிகளுக்கு வழங்குவதை ரயில்வே உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.