Para Commondos: இந்திய பாரா கமாண்டோக்கள் கண்ணாடியை விழுங்குவது ஏன் என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பாரா கமாண்டோக்கள்:


இந்திய சிறப்புப் படைகளின் முக்கியப் பிரிவான பாரா கமாண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது, உடல் திறனை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்ல. மன மற்றும் உணர்ச்சி வலிமையை மேம்படுத்துவதும் வலியுறுத்துகிறது. இது ஒரு தனித்துவமான மற்றும் சர்ச்சைக்குரிய பயிற்சியை உள்ளடக்கியது ஆகும். அதன்படி, ஒரு கண்ணாடியை பற்களால் கடித்து உடைத்து மென்று விழுங்குவது ஒரு வழக்கமாக பின்பற்றப்படுகிறது. பாரா கமாண்டோக்கள் ஏன் இத்தகைய ஆபத்தான வேலையைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?.


பாரா கமாண்டோவின் சிறப்புகள் என்ன ?


பாரா கமாண்டோக்கள் இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவாக விளங்குகிறது. நேரடியான கள நடவடிக்கைகள், பணயக்கைதிகளை மீட்பது, உளவு பார்த்தல் மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு போன்ற மிகவும் கடினமான சூழ்நிலைகளில் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதே இவர்களின் முக்கிய பணியாகும். இந்த வீரர்கள் அதிக உடல் மற்றும் மன திறன் கொண்டவர்களாக விளங்க வேண்டும். இதற்கான சுயக்கட்டுப்பாடு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை பயிற்சி மூலமாக பாரா கமாண்டோ வீரர்கள் கற்றறிகின்றனர் .


கடினமான பயிற்சிகள்


இந்திய பாரா கமாண்டோ வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி உலகிலேயே மிகவும் கடினமானது ஆகும். அதில் அவர்கள் பல்வேறு வேதனையான விஷயத்தையும் கடந்து செல்கிறார்கள். இதனை ஒரு சராசரி நபர் நினைத்து பார்த்தால், அவர்களின் மனம் அலறி துடிக்கும். இந்த பயிற்சியின் போது வீரர்கள் பசியுடன் காக்க வைக்கப்படுவார்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அவர்களின் சோர்வைப் போக்க வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.


கண்ணாடியை விழுங்கும் பாரா கமாண்டோக்கள்:


அத்தகைய ஆபத்தான ம்ற்றும் கடினமான பயிற்சிக்குப் பிறகு, பாரா கமாண்டோ வீரர்களுக்கு இளஞ்சிவப்பு தொப்பி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு அவர்கள் ஒரு சிறப்புப் பொருளைப் பெறுகிறார்கள். அதாவது வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் விதமான தியாக பேட்ஜ் வழங்கப்படுகிறது. இதனிடையே,  பாரா கமாண்டோக்கள் கண்ணாடி சாப்பிடுபவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். காரணம் அவர்கள் உண்மையில் கண்ணாடியைக் கூட பயிற்சியின் ஒரு பகுதியாக சாப்பிட வேண்டும் .


பாரா கமாண்டோக்களுக்கு இளஞ்சிவப்பு தொப்பியைக் கொடுத்த பிறகு, அவர்களுக்கு ரம் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸ் வழங்கப்படுகிறது. மதுவை அருந்திய பிறகு வீரர்கள் அந்த கிளாஸின் ஒரு முனையை தங்களது பற்களால் கடித்து உடைத்து மென்று விழுங்க வேண்டும் என்ற நடைமுறை பல காலங்களாக பின்பற்றப்படுகிறது. அதனை செய்த பிறகுதான் அவர்களுக்கு தியாக பேட்ஜ் கிடைக்கிறது.


கண்ணாடியை விழுங்குவது ஏன்?


கண்ணாடியை மென்று விழுங்குவது வீரர்களின் துணிச்சலையும் , தன்னம்பிக்கையையும் காட்டுவது மட்டுமின்றி , மனதளவில் வலிமையடையவும் உதவுகிறது. கண்ணாடியை உடைக்கும்போது அவர்களால், எந்தச் சூழலையும் , எவ்வளவு கஷ்டமானாலும் எதிர்கொள்ள முடியும் என்பதையே காட்டுகிறது. கண்ணாடியை உடைத்ததும் கமாண்டோக்கள் அதை மெல்லுகிறார்கள். அதற்கு காரணம்,  கடினமான காலங்களில் அமைதியாக இருப்பது எப்படி என்பதை இந்த செயல்முறை கற்றுக்கொடுக்கிறது . தீவிரமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய போர்க்களத்தில் பொறுமை காக்க இந்த மனநிலை அவர்களுக்கு உதவுகிறது .